தி.மு.க. & காங்கிரஸ் கூட்டணி உறுதியாவிட்ட சூழ்நிலையில், தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து வந்த மாணிக்கம் தாகூர் எம்.பி., ‘‘ஒற்றுமையே நமது மிகப்பெரிய பலம்’’ என் பதிவிட்டிருக்கிறார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக – காங்கிரஸ் இடையிலான கூட்டணி தொடருமா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. ஏனென்றால் காங்கிரஸ் கட்சி தரப்பில் அதிக தொகுதிகள், 2 ராஜ்ய சபா சீட், உள்ளாட்சியில் 20 சதவிகித இடம் என்று மிகப்பெரிய டிமாண்ட்டை முன் வைத்துள்ளது. ஆனால் திமுக தரப்பில் 29 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் என்ற அளவில் இறங்கி வந்துள்ளது.
ஆனால் திமுகவின் இந்த ஆஃபருக்கே அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும் தலைமையிடம் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதனால் களத்திலும் திமுக மற்றும் காங்கிரஸ் இடையில் ஒரு பிரிவு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்து திமுக வெளியேற வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன. இதனிடையே நேற்று முதல்வர் ஸ்டாலின் -& ப.சிதம்பரம் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது ராகுல் காந்தியின் மெசேஜை ஸ்டாலினிடமும், ஸ்டாலினின் ஆஃபரை ராகுல் காந்தியிடமும் ப.சிதம்பரம் கூறிவிட்டார். இதன்பின் நேற்றிரவு செல்வப்பெருந்தகையின் மகள் அக்ஷய பிரியாவின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பங்கேற்றார். அங்கு காங்கிரஸ் கட்சியின் சில மூத்த தலைவர்களும் பங்கேற்றனர். இந்த நிலையில் ராஜ்ய சபா தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது. இதனால் இன்றைய தினமே வேட்பாளரை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இப்படியான சூழலில், திமுக – காங்கிரஸ் இடையிலான கூட்டணி உறுதியாகிவிட்டதாக தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் சூசகமாக ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் மாணிக்கம் தாகூர், ‘‘தனிநபர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.. ஆனால் அதனைவிடவும் கட்சியே மிகப்பெரியது. காங்கிரஸ் கட்சித் தலைமை எடுக்கும் முடிவை அனைவரும் முழு மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒற்றுமையே நமது மிகப்பெரிய பலம்’’ என்று பதிவிட்டுள்ளார்.
