திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் இன்று அதிகாலை போலீசார் அதிரடி ரெய்டு மேற்கொண்டிருக்கின்றனர். கல்குவாரி மற்றும் செம்மண் எடுத்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில், திடீர் ரெய்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

திமுகவின் முன்னாள் அமைச்சர் மூர்த்தி, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்தார். அவருக்குச் சொந்தமாக மதுரையின் புறநகர் பகுதிகளில் மணல் குவாரிகள் மற்றும் கல் குவாரிகள் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது. அதன்படி, மதுரை பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் உள்ள கிரஷர் மற்றும் செம்மண், கல் குவாரிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் விதிகளை மீறி அதிக அளவில் செம்மண் மற்றும் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது.

இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கு தொடர்பான விசாரணைக்காக மதுரை ஐயர் பங்களா, ரோஜா வீதியில் உள்ள மூர்த்தியின் வீட்டில் மாவட்ட காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கல் குவாரி டெண்டர் தொடர்பான ஆவணங்களைப் பெற்று காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், குவாரிகளில் விதிகளுக்கு உட்பட்டுதான் மண் மற்றும் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதா, எவ்வளவு அளவு வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சோதனை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விசாரணையின் முழு விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சோதனை நடைபெறும் நிலையில், மூர்த்தியின் வீட்டைச் சுற்றிலும் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal