சென்னை கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு கடந்த செப்டம்பர் மாதம் முதல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் எம்ஏல்ஏ வி. எஸ். பாபு காலமானர்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு. 75 வயதான இவர், கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக இறுதியாக கடந்த செப்டம்பர் 22ம் தேதி மருத்துவமனை அறிக்கை வெளியானது.
அதன் பிறகு எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு உடல்நிலை குறித்தான எந்த அறிக்கையும் வெளியாகமால் இருந்துவந்தது. இதனிடையே தமிழக முதல்வர் விஜய், வி.எஸ்.பாபுவை நேரில் சென்று நலம் விசாரித்தார். அதேபோல, அமைச்சர்கள் அருண் ராஜ், வெங்கட ரமணன் உள்ளிட்டோரும் விஎஸ் பாபுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
70 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துவரும் வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்துவந்த நிலையில், அவரது உடல் நிலை குறித்தான தகவலை வெளியிட உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு, இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். முன்னதாக மருத்துவமனைக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, விஎஸ் பாபுவின் உறவினர்கள் ஆகியோர் வருகை தந்தனர். மேலும், மருத்துவமனைக்கு அண்ணாநகர் துணை ஆணையர் அர்பிதா ராஜ்குப்த் தலைமையில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இது குறித்து தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் வி. எஸ். பாபு அவர்கள், நீண்டகால சுவாசப் பாதிப்பு காரணமாக, 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதியன்று எம்.ஜி.எம் ஹெல்த்கேர் (MGM Healthcare) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிறந்த மருத்துவ கவனிப்பு மற்றும் எங்களது பல்நோக்கு மருத்துவக் குழுவினரின் தீவிர முயற்சிகள் இருந்தபோதிலும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. அதனைத் தொடர்ந்து, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் விளைவாக, 2026-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதியன்று பிற்பகல் 2:24 மணிக்கு அவர் காலமானார்.
இந்த இக்கட்டான சூழலில், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எம்.ஜி.எம் ஹெல்த்கேர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
