அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதையடுத்து, அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. எனினும், இதுவரை இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை.

இந்நிலையில், நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக அறிவித்தார். தான் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் நுழைய வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் விரும்புவதாகவும் சீமான் தெரிவித்தார். இடைத்தேர்தலில் பிற கட்சிகள் ஆதரவு அளித்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என்ற கேள்விக்கும் பதிலளித்த அவர், அம்பாசமுத்திரத்தில் வென்று அவைக்குள் சென்றுவிட வேண்டும் என்று வெறியோடு இருப்பதாக குறிப்பிட்டதோடு, தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற பசியோடு இருக்கும் தனக்கு மற்ற கட்சிகள் ஆதரவு தந்தால் ஏற்பதாகவும் தெரிவித்தார்.

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், அத்தொகுதியில் போட்டியிடப் போவதாக சீமான் அறிவித்திருப்பது அரசியல் களத்தில் கவனம் பெற்றது. இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் சீமானுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தேர்தல் தேதி அறிவிக்கட்டும். அதன்பிறகு அதுதொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal