கலைஞர், ஜெயலலிதா காலகட்டத்தில் தமிழகத்தில் எந்தக்கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறதோ, அந்தக்கட்சி கூட்டணியில் இருக்கும் பா.ம.க.! ஏனென்றால் ராமதாஸ் ‘ஆளுங்கட்சி’ வியூகத்தை கையில் எடுப்பார்.
தீவிர அரசியலில் இருந்து ராமதாஸ் கொஞ்சம் ஒதுங்கியிருந்தபோது, அன்புமணி தலைமையிலான பா.ம.க. கூட்டணி விவகாரத்தில் சரியாக முடிவெடுக்காததால் எதிர்க்கட்சி கூட்டணியில் இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் அ.தி.மு.க.வுடனான கூட்டணியை முற்றிலுமாக முறித்துவிட்டு த.வெ.க. அல்லது தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கும் முயற்சியில் பா.ம.க. இறங்கியிருப்பதாக தகவல்கள் வருகிறது.

இது பற்றி பா.ம.க. வட்டாரத்தில் பேசியபோது, ‘‘மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலின் போது அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்காமல் பாமக பின்வாங்கியது. இதன் மூலமாக தவெக மதுராந்தகம் தொகுதியில் எளிதாக வென்றது. இந்த இடைத்தேர்தலின் போதே பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வரும் முடிவில் தவெக இருப்பதாகவும், சௌமியா அன்புமணிக்கு முக்கிய அமைச்சரவை கொடுக்க விஜய் முடிவு செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகின.
இதன்பின் பாமக கூட்டணிக்குள் வந்தால், தவெக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும் என்று திருமாவளவன் அறிவித்தார். இதன்பின் தவெக தலைமை சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டது. அதேபோல் சௌமியா அன்புமணியும் நாங்கள் என்டிஏ கூட்டணியில் தான் இருக்கிறோம் என்று கூறி சென்றார். என்டிஏ கூட்டணியில் இருந்தாலும், அதிமுக உடன் மட்டும் கருத்து வேறுபாட்டில் இருப்பதாக தெரிகிறது. காரணம், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கொடுத்த ‘வாக்குறுதி’யை எடப்பாடி பழனிசாமி காப்பாற்றவில்லையாம்!
காவிரி விவகாரத்தின் போது ராகுல் காந்தி மேகதாது அணை குறித்து தமிழ்நாட்டிற்கு ஆதரவாக பேசினால், நான் என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியில் வரத் தயார் என்ரு அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார். இதனால் பாமக கூட்டணி மாறும் திட்டத்தில் இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியது. இருப்பினும் இடைத்தேர்தலுக்கு பின் தவெகவிடம் இருந்து அழைப்பு வரும் என்று பாமக தலைமை எதிர்பார்த்தது.
ஆனால் முதல்வர் விஜய்யோ அல்லது தவெக தலைமையோ இதுவரை எந்தவொரு சிக்னலும் காட்டவில்லை. விசிகவும் தவெகவின் செயல்பாடுகள் மீது எந்தவொரு விமர்சனமும் வைப்பதில்லை. இன்னொரு பக்கம் திமுக தரப்பில் ‘மருமகன்’ மூலமாக பாமக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
திமுக கூட்டணி பக்கம் பாமக வந்தால், வன்னியர் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் இந்த கூட்டணியால் ஈர்க்க முடியும் என்ற அளவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. காரணம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வடமாவட்டங்களில் வெற்றி பெற்றதற்கு காரணம் பா.ம.க. கூட்டணியில் இருந்ததுதான். இதனை அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஓபனாகவே ஒத்துக்கொண்டார்.
இந்த நிலையில்தான் பாமக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது தொடர்பாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாறி வருகிறது. உள்ளாட்சித் தேர்தலிலேயே பாமக வேறு கூட்டணிக்கு மாறுமா அல்லது நாடாளுமன்றத் தேர்தலின் போது புதிய கூட்டணியை அமைக்குமா என்பதே இப்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது. எனினும் மருமகனின் ‘மல்லுக்கட்டு’ தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது’’ என்றனர்.
