தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், ‘‘மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக முதல்வர் விஜய்க்கும், மதசார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணிக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் த. வெ. க. வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியது. த.வெ.க. அரசு – தமிழக மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட அரசாக – கடந்த பொதுத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதே சமயம் ஊழலற்ற நேர்மையான வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நிர்வாகத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்ற தமிழக முதல்வர் திரு.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அரசுக்கு, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளின் மக்கள் அளித்திருக்கின்ற முழுமையான அங்கீகாரம் தான் இந்த இடைத்தேர்தல் வெற்றி.

குறைந்த மாதங்களிலே தமிழக முதல்வர் அவர்களின் தலைமையில் நடைபெறுகின்ற நல்லாட்சிக்கு சாட்சியாக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

தமிழக முதல்வர் அவர்களுக்கும், மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும், தேர்தல் பொறுப்பாளர்களுக்கும், வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துககொள்கிறேன். வாக்காளப் பெருமக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று அதில் கூறியிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal