திமுக மாநாட்டுக்கு சட்டவிரோதமாக மண் எடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் எ.வ வேலு மற்றும் அவரது மகன் முன் ஜாமீன் கோரிய மனுவில், காவல்துறை தரப்பு பதிலளிக்கும் வரை அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை ஏதும் எடுக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி, திருவண்ணாமலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்காக திடலை சமன் செய்ய அருகில் உள்ள மலப்பம்பாடி ஏரியில் இருந்து சட்டவிரோதமாக 12 ஏக்கர் பரப்பளவுக்கு 10 முதல் 23 அடி ஆழத்திற்கு மண் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து, ஏரியில் இருந்து மண் எடுக்கப்பட்டதால் அரசுக்கு சுமார் 8 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில், கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அவரது மகன் எ.வ.குமரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் எ.வ.குமரன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவின் விசாரணையின் போது, எ.வ.வேலு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “எனது மனுதாரர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் எனவும், சட்டவிரோதமாக மண் எடுத்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மாநாடு நடைபெற்ற குறிப்பட்ட இடத்தில் ஏற்கனவே 3 முறை கூட்டம் நடந்துள்ளது. அதனால் மண் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை” என வாதிட்டார்.
இதில் இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, திமுக மாநாட்டுக்கு மணல் எடுக்கப்பட்டது உண்மையா? இல்லையா? என்பது குறித்து காவல் துறை விசாரணை செய்தால் என்ன? என கேள்வி எழுப்பி, இந்த வழக்கில் எ.வ வேலுக்கு எந்த இடைக்கால நிவாரணமும் வழங்க முடியாது. நிவாரணம் வேண்டும் என்றால் அவர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எ.வ வேலு மற்றும் அவரது மகன் தரப்பில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஜான் சத்யன், பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் எனத் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன், வழக்கில் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும், அதுவரை இடைப்பட்ட காலத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ வேலு மற்றும் அவரது மகன் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை ஏதும் எடுக்க கூடாது என உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 15 ஆம் தேதி ஒத்திவைத்தார்.
