மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று அமைதியாக நடைபெற்று முடிந்தது. மதுராந்தகத்தில் 86.26 சதவீதம், தாராபுரத்தில் 80.30 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இது யாருக்கு சாதகமாக அமைந்திருக்கப் போகிறது என்பதை பார்ப்போம்..!
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் போட்டியிட்டு அதிமுக சார்பில் வெற்றி பெற்ற, மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்ததுடன், ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்தனர். இதையடுத்து, இத்தொகுதிகளுக்கு அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் (தவெக), பரந்தாமன் (திமுக), கணிதா சம்பத் (அதிமுக), சுகந்தி (மார்க்சிஸ்ட், ஜானகிராமன் (நாதக) உள்ளிட்ட 28 பேர் களத்தில் இருந்தனர். அதே போல், தாராபுரம் தொகுதியில் சத்யபாமா ( தவெக), சுகன்யா (திமுக), பானுமதி (அதிமுக), லட்சுமணன் (இந்திய கம்யூனிஸ்ட்), கார்த்திகா(நாதக) உள்ளிட்ட 22 பேர் களத்தில் இருந்தனர்.
அக்டோபர் 4 – ம் தேதி மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுற்ற நிலையில், நேற்று காலை 7 மணி முதல் இரண்டு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. மதுராந்தகத்தில் காலை 2 மணி நேரம் வாக்குப்பதிவு மந்தமான நிலையிலேயே இருந்து வந்தது. மேலும், ஏழு இடங்களில் இயந்திரங்கள் பழுது காரணமாக வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. பின்னர், பிற்பகலுக்கு மேல் வாக்குப்பதிவு விறுவிறுப்பை எட்டியது. ஆண்கள், பெண்கள் என பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

தாராபுரம் தொகுதியில் நேற்று காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். கவுண்டச்சி புதூர் வாக்குச்சாவடியில் திமுகவில் இருந்து தவெகவுக்கு தாவிய நபர் தவெக சார்பில் பூத் ஏஜெண்டாக நியமிக்கப்பட்டதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சுமார் 1 மணி நேரம் அந்த வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தநிலையில்,இறுதி நேரத்தில் வந்த வாக்காளர்களுக்கு, டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், வாக்குஎண்ணிக்கை மையங்களுக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இறுதி நிலவரப்படி மதுராந்தகம் தொகுதியில் 86.26 சதவீதமும், தாராபுரத்தில் 80.30 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன. கடந்த ஏப்ரலில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மதுராந்தகத்தில் 92.30 சதவீதமும், தாராபுரத்தில் 89.9 சதவீதமும் வாக்குகள் பதிவாயிருந்த நிலையில், தற்போது இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரும், அக்டோபர் 9ம் தேதி வாக்கு எண்ணிக்கை மையங்களில் காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு அன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
பொதுவாக முந்தைய சட்டசபை தேர்தலை ஒப்பிடும்போது அடுத்த சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்தால் அது ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். வாக்குப்பதிவு அதிகரித்தால் அது ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையாக பார்க்கப்படும். இந்த கணிப்பு பல தேர்தல்களில் அப்படியே பலித்துள்ளது. ‘எஸ்.ஐ.ஆர்.’ எனும் வாக்காளர் பட்டியலுக்கு பிறகு பீகாரில் மட்டும் இது மாறியது.
மதுராந்தகம் தொகுதியை எடுத்து கொண்டால் இறுதி நிலவரப்படி மதுராந்தகம் சட்டசபை தொகுதியில் இன்று 85.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. கடந்த ஏப்ரல் 23 சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியில் 92.28 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இதனை ஒப்பிட்டு பார்த்தால் இந்த முறை 6.38 சதவீதம் வரை ஓட்டுப்பதிவு குறைந்துள்ளது.

அதேபோல், தாராபுரம் சட்டசபை தொகுதிகளில் 80.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. கடந்த ஏப்ரல் 23ம்தேதி நடந்த சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியில் மொத்தம் 88.53 சதவீதம் அளவுக்கு வாக்கு பதிவாகி இருந்தது. இதனை ஒப்பிடும்போது இந்த முறை 8.22 சதவீதம் வரை ஓட்டுப்பதிவு சரிந்துள்ளது.
இதனால் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டசபை தொகுதிகளிலும் ஆளும் கட்சியின் வேட்பாளர்களுக்கு சாதகமாக ரிசல்ட் வரலாம் என சொல்லப்படுகிறது. இருப்பினும் நாம் ஒரு விஷயத்தை மனதில் வைத்து கொள்ள வேண்டும். அது என்னவென்றால் கடந்த சட்டசபை தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் சேர்ந்தார். தற்போது அவரே மீண்டும் தவெக வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்.
அதேபோல், கடந்த சட்டசபை தேர்தலில் தாராபுரம் தொகுதியில் அதிமுகவில் வெற்றி பெற்று எம்எல்ஏவான சத்யபாமா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். தற்போது அவரே தவெக சார்பில் போட்டியிட்டுள்ளார். வெற்றி பெற்றவுடனே இருவரும் அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால் இருவருக்கும் களத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மக்களின் மனநிலை என்னவாக உள்ளது? என்பது புரியாத புதிராக உள்ளது. வாக்குப்பதிவு குறைந்து இருந்தால் வாக்களித்தவர்கள் தவெக வேட்பாளர்களுக்கு எதிராக ஓட்டு செலுத்தி இருந்தால் ரிசல்ட் மாற வாய்ப்புள்ளது. இதனால் இந்த 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.
குறிப்பாக ‘திருமங்கலம் ஃபார்முலா’வுக்கு இந்த இடைத்தேர்தல் முற்றுப்புள்ளி வைத்திருப்பதால் மக்களின் உண்மையான மனநிலையை உளவுத்துறையால் கூட கணிக்க முடியவில்லை என்பதுதான் உண்மையான நிலவரம்!
