100 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பி.டி. அரசகுமாரின் மகன் மற்றும் மகள் வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி 100 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பிடி அரசகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பி.டி. அரசகுமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் கடந்த ஜூன் 11 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, பி.டி. அரசகுமாரின் மனைவி கோகிலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார். அது நீதிபதிகள் என்.சதீஷ்குமார், கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, திமுக எம்.பியும், மூத்த வழக்கறிஞரருமான பி.வில்சன் ஆஜராகி, 2024-25 ஆம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்துக்கு, 2026 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து, கைது செய்து, குண்டர் சட்டத்தில் அரசகுமார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

இந்த வழக்கில் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை எனவும், அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் குறிப்பிடட்டதோடு, குண்டர் சட்டத்தை எதிர்த்த மனு 13 நாட்கள் காலதாமதமாக பரிசீலிக்கப்பட்டது எனவும் குற்றம்சாட்டினார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசகுமார் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இதைத்தொடரந்து இன்று சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள பி.டி. அரசகுமாரின் மகன் மற்றும் மகள் வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இந்த விவகாரத்தில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, அன்பில் மகேஷிடம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal