காவிரி நீர் விவகாரம் தமிழக, கர்நாடகா மாநிலங்களில் பெரும் பரபரப்பாகியுள்ளது. தண்ணீர் வழங்க வேண்டுமென தமிழகத்திலும், தண்ணீர் திறந்துவிடக்கூடாது என கர்நாடகாவிலும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. தஞ்சாவூர் நேற்று திமுக நடத்திய போராட்டத்தில் முதலமைச்சர் விஜயை த்ரிஷாவுடன் ஒப்பிட்டு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்தார். இதுதொடர்பாக தவெக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் உதயநிதி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடாமல் அணை கட்டுவதில் கறாராக உள்ளது. தண்ணீர் திறந்துவிட கோரி தமிழகத்திலும், தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க கூடாது என்று கர்நாடகாவிலும் போராட்டம் நடைபெறுகிறது. முதலமைச்சர் விஜய் கர்நாடகா சென்று, அம்மாநில முதலமைச்சர் டி.கே சிவக்குமார் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போதைய சூழலுக்கு விஜய் கர்நாடகா வரவேண்டாம் என சிவக்குமார் கூறிவிட்டார்.

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி சிபிஐ, தேமுதிக கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த விவகாரத்தில் பிரதான எதிர்க்கட்சியான திமுக தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டது. இதில் எதிர்க்கட்சி தலைவரும், அக்கட்சி இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். மத்திய அரசு, கர்நாடகா அரசு, மெத்தனமாக உள்ள தவெக அரசு கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் பேசிய உதயநிதி விஜய் குறித்து தான் அதிகம் விமர்சனம் செய்தார். நடிகை த்ரிஷாவுடன் ஒப்பிட்டு விஜயை விமர்சனம் செய்தது சர்ச்சையானது. உதயநிதியின் பேச்சுக்கு அமைச்சர் ஆனந்த் உள்ளிட்ட தவெகவினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அவர் எல்லை மீறி பேசியுள்ளதாக கூறி வருகிறார்கள்.

உதயநிதியை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று தவெக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தவெகவினர் கூறுகையில், “உதயநிதியின் பேச்சு மிகவும் மோசமாக இருந்தது. தவெக பொதுச்செயலாளர் அமைச்சர் ஆனந்த் நேற்று இரவு மாவட்ட செயலாளர்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதில் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் இன்று காலை உதயநிதியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். மேலும் உதயநிதி மீது மாவட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கவுள்ளோம்” என்றனர்.

இந்நிலையில், உதயநிதிக்கு எதிராக தஞ்சை காவல் நிலையத்தில் தவெக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் குறித்தும்,பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் உதயநிதி பேசியதாக மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தவெக மகளிர் அணி தலைவர் பைரவி புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் உதயநிதி மீது தஞ்சை போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தவிர, த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை நடக்க இருக்கும் நிலையில், உதயநிதியை இன்று கைது செய்தாக வேண்டும் என காவல்துறையினர் அதிதீவிர நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றனர். அதே சமயம் உடனடியாக உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள் தி.மு.க. தரப்பு! அவசர வழக்காக எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம் மதியத்திற்கு மேல் வழக்கை எடுத்துக்கொள்வதாக தெரிவித்திருக்கிறது.

ஆக மொத்தத்தில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரில் உதயநிதி பங்கேற்கக்கூடாது என்பதே த.வெ.க.வின் விருப்பமாக இருக்கிறது என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal