தஞ்சாவூரில் நேற்று திமுக நடத்திய போராட்டத்தில் முதலமைச்சர் விஜயை த்ரிஷாவுடன் ஒப்பிட்டு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்தார். இதுதொடர்பாக தவெக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் உதயநிதி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போராட்டத்தில் பேசிய உதயநிதி விஜய் குறித்து தான் அதிகம் விமர்சனம் செய்தார். நடிகை த்ரிஷாவுடன் ஒப்பிட்டு விஜயை விமர்சனம் செய்தது சர்ச்சையானது. உதயநிதியின் பேச்சுக்கு அமைச்சர் ஆனந்த் உள்ளிட்ட தவெகவினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அவர் எல்லை மீறி பேசியுள்ளதாக கூறி வருகிறார்கள்.
இந்நிலையில், உதயநிதிக்கு எதிராக தஞ்சை காவல் நிலையத்தில் தவெக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் குறித்தும்,பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் உதயநிதி பேசியதாக மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தவெக மகளிர் அணி தலைவர் பைரவி புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் உதயநிதி மீது தஞ்சை போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இன்று காலை நீலாங்கரை வீட்டில் உள்ள உதயநிதியை கைது செய்ய காவல்துறையினர் சென்றிருந்தனர். அதே வேளையில் உதயநிதியை கைது செய்யக்கூடாது என தி.மு.க.வின் மூத்த வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்தனர்.
இன்று மதியத்திற்கு மேல் வழக்கை எடுத்துக்கொள்வதாக நீதிபதி தெரிவித்திருந்த நிலையில், இன்று பகல் 12 மணி வரை உதயநிதியை கைது செய்யக்கூடாது என உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு அறிவுறுத்தியிருக்கிறது.
