தமிழகத்தைப் பொறுத்தளவில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆளும், ஆண்ட திராவிடக் கட்சிகளுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தது.

‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்த மூன்றே ஆண்டுகளில் முதலமைச்சர் ஆனார் விஜய்! இது திராவிடக் கட்சிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. மத்தியிலும் ஆளும் பா.ஜ.க. 2026ல் கூட்டணி ஆட்சியை அமைத்துவிடுவோம் என்று கணக்குப் போட்டதும் பொய்த்துப் போனது. இந்த நிலையில்தான் பா.ஜ.க.விலிருந்து விலகிய அண்ணாமலை தனி இயக்கத்தை ஆரம்பித்தார். அந்த இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இது பற்றி ‘வி தி லீடர்ஸ்’ நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ‘‘ சார், சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலை புரட்டி போட்டுள்ளது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளிலுமே ஏராளமான மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிடுவோம் என எதிர்பார்த்த பாஜக ஒரே ஒரு தொகுதியில் தான் வெற்றி பெற்றது. கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை, தமிழக பாஜகவின் முகமாக அண்ணாமலை இருந்தார்.

அவரது வருகை பரபரப்பானாலும் தேர்தல் அரசியல் ரீதியாக பாஜகவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் அண்ணாமலையை ஓரம்கட்டிவிட்டு, நயினார் நாகேந்திரனை மாநில தலைவராக நியமித்தனர். தேர்தல் பொறுப்பு, கட்சி பொறுப்பு எதிலும் அண்ணாமலைக்கு முக்கியத்துவம் தரவில்லை. இதனால் அண்ணாமலை கடும் அதிருப்தியில் இருந்தார்.

கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதை கூட அண்ணாமலை புறக்கணித்தார். தேர்தல் பிரச்சாரத்திலும் அவர் பட்டும் படாமல் இருந்து வந்தார். கட்சி சார்ந்து எந்த நிகழ்ச்சிகளிலும் அண்ணாமலை தலை காட்டவில்லை. அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க போகிறார் என தகவல் வெளியானது. இதையடுத்து கடந்த மாதம் அவர் பாஜகவில் இருந்து விலகினார். தொடர்ந்து ‘வீ த லீடர்ஸ்’ என்கிற இயக்கத்தை உருவாக்கினார். ஆன்லைன் மற்றும் அந்தந்த பகுதிகள் வாரியாக உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்றது.

‘வி த லீடர்ஸ்’ இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான முயற்சியை இறங்கியுள்ளது. அந்த இயக்கம் ஆரம்பித்த முதல் நாளிலேயே 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்தனர். கடந்த 12 ஆம் தேதி பொள்ளாச்சியில் அண்ணாமலை இயக்கத்தின் முதல் மாநாடு நடைபெற்றது. இது பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பாஜகவில் இருந்தவரை அண்ணாமலை அடிக்கடி ப்ரஸ் மீட் கொடுத்து பரபரப்பான கருத்துகளை சொல்லுவார். தவெக ஆட்சியை ஒரு வருடத்திற்கு விமர்சிக்க மாட்டேன் என அண்ணாமலை கூறியுள்ளார். ப்ரஸ் மீட் கொடுக்காமல் சமூகவலைதளங்களில் அறிக்கை மட்டும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் வீ த லீடர்ஸ் இயக்கத்தின் இரண்டாவது மாநாட்டை தூத்துக்குடியில் நடத்த திட்டமிட்டுள்ளனர். தென் மண்டலத்தின் வாக்கு வங்கியை குறி வைத்து அண்ணாமலை இந்த நகர்வை எடுத்துள்ளார். அடுத்தடுத்து மண்டல வாரியாக மாநாடு நடத்தவுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தலை சந்திப்பதற்கு அண்ணாமலை பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார். அந்த வகையல் அவரின் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றவுள்ளார். இதற்காக புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை விரைவில் அவர் அறிவிக்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வருகிற ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரத்தில் புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை அண்ணாமலை அறிமுகம் செய்ய இருக்கிறார்.

அதனை தொடர்ந்து வருகிற செப்டம்பர் மாதம் கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் மதுரை அல்லது திருச்சி அண்ணாமலை கட்சியின் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற திட்டமிட்டு வருகிறார்கள். இதற்கான இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள வீ த லீடர்ஸ் நிர்வாகிகள், தொண்டர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தலை டார்கெட்டாக வைத்து இறங்கவுள்ளார்கள்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal