ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து முந்தைய திமுக அரசு தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற தவெக அரசு முடிவு செய்த நிலையில், அதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு செல்ல உள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை சிபிஐ விரைவில் மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி பெரம்பூர் செம்பியம் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 27 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தொடர்பு கொண்டிருந்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் புலன் விசாரணையை தமிழ்நாடு காவல்துறை நியாயமாக மேற்கொள்ளவில்லை என்றும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் ஆம்ஸ்ட்ராங் சகோதரர் இமானுவேல். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆம்ஸ்ட்ராங் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அப்போதைய திமுக தலைமையிலான தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. அதேசமயம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு ஜாமின் வழங்கப்படுவதாகவும் அவர்கள் வழக்கின் சாட்சியங்களை அழிக்க முற்படுவதாகவும் கூறி ஆர்ம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி உச்சநீதிமன்றத்தில் தனியாக மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகள், உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் தமிழக காவல்துறை சிபிஐ வசம் ஒப்படைக்கவில்லை. இந்நிலையில் சட்டசபை தேர்தலில் தவெக வெற்றி பெற்று தமிழகத்தில் புதிதாக ஆட்சியை அமைத்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சிபிஐ வழக்கு ரத்து கோரியது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த மே மாதம் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது உச்சநீதிமன்றம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக அரசின் தற்போதைய நிலைப்பாடு எனக் கேள்வி எழுப்பியது. இதனைத்தொடர்ந்து தமிழக அரசு தாக்கல் செய்த இடையீட்டு மனுவில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை மேற்கொண்டு தொடர விரும்பவில்லை என்றும் அந்த மனுவை திரும்பப் பெறுவதாகவும் தெரிவித்தது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தடை கோரிய வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது. ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், முந்தைய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெறுவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதி கோரிக்கையை ஏற்று மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெறுவதற்கும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க அனுமதி அளித்தது.

அதேசமயம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் ஜாமின் இருப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை செப்டம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றிய உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு தெரிவித்த நிலையில் கோரிக்கையை ஏற்று தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து விரைவில் சிபிஐ அதிகாரிகள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை கையில் எடுத்து தீவிர விசாரணை நடத்த உள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal