தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் முன்ஜாமின் உத்தரவை பெறுவதற்காக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ஊத்தங்கரை தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மைச்சர் செந்தில்பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோருக்கு கடந்த 8-ந்தேதி நிபந்தனை முன்ஜாமின் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இருவரும் காலை மற்றும் மாலையில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
கடந்த 8-ந்தேதி முன்ஜாமின் கிடைத்த பிறகும் செந்தில்பாலாஜி தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார். போலீசார் தேடி வந்த நிலையில் முன்ஜாமின் கிடைத்த பிறகும் அவர் தலைமறைவாக இருந்தார்.
இதற்கிடையே, குதிரை பேர வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்போது தங்களை துன்புறுத்தக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிடக்கோரி செந்தில்பாலாஜி, அவரது தம்பியும் மனு தாக்கல் செய்து இருந்தனர். அதில், ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் எங்களுக்கு இந்த ஐகோர்ட்டு நிபந்தனை முன்ஜாமின் வழங்கியது. ஐகோர்ட்டு விதித்துள்ள நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற தயாராக உள்ளோம். ஆனால், தமிழ்நாடு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ‘கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கணக்கு தீர்க்க வேண்டியுள்ளது’ என்று வெளிப்படையாக பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். அதன்படி, ஏதேனும் ஒரு வழக்கில் எங்களை கைது செய்ய போலீசாருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
குதிரை பேர வழக்கில் எங்களை காவலில் வைத்து விசாரிக்க அவசியமில்லை என்று ஐகோர்ட்டு முன்ஜாமின் வழங்கிய பின்னும், தொடர்ந்து சோதனைகள் நடத்தப்படுகின் றன. சட்டப்படியான எந்த புலன் விசாரணையயும் நாங்கள் தடுக்கவில்லை. நிலுவையில் உள்ள வழக்குகளின் விசாரணைக்கு நாங்கள் தேவைப்படுவதாக இருந்தால். பி.என்.எஸ்.எஸ்., சட்டத்தின் 35 (3) வது பிரிவின் கீழ் முறையாக நோட்டீஸ் அனுப்ப போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம். சோதனை, விசாரணை என்ற பெயரில் எங்களை துன்புறுத்தக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, குதிரை பேர வழக்கில் முன்ஜாமின் வழங்கப்பட்டும் இதுவரை மனுதாரர்கள் கீழ் கோர்ட்டில் சரணடைந்து முன்ஜாமின் பெறவில்லை. இந்த சூழ்நிலையில், தங்களை துன்புறுத்தக்கூடாது என கோர முடியாது. முன்கூட்டியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனால் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார். சுமார் ஒரு மாத காலமாக தலைமறைவாக இருந்த நிலையில், முன்ஜாமின் நிபந்தனையின்படி சூரிட்டி வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வழக்கறிஞர்களுடன் செந்தில்பாலாஜி வந்துள்ளார்.
