சமீபத்தில் போதைப்பொருட்களுக்கு எதிராக முதல்வர் விஜய் கடும் நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், டாஸ்மாக்கை தனியார் மயமாக்லாமா? அல்லது டாஸ்மாக்கையே எடுத்துவிடலாமா’ என்பது தொடர்பாக விவாதம் நடந்திருக்கிறது.
இது தொடர்பாக மதுவிலக்கு அமலாக்கத்துறை அமைச்சர் விக்னேஷ் கூறுகையில், ‘‘இப்போதும் கூட டாஸ்மாக் சென்று பார்த்தால் குப்பைமேடாக இருக்கும். யாரேனும் எங்கேயாவது படுத்திருப்பார்கள். இதை கண்டுகொள்ளாமல் இருக்க முடியுமா? இந்த துறையை சரிசெய்ய வேண்டும், சீரமைக்க வேண்டும்.
அதற்கான முயற்சிகளை தவெக அரசு மேற்கொண்டது. அந்த முயற்சிக்காக எங்களுக்குள் (துறை சார்ந்த கலந்துரையாடலை குறிப்பிடுகிறார்) பேசிக் கொண்ட விவாதத்தின் போது, சிலர் ரெஸ்டோ பார் கொண்டு வரலாம், சிலர் தனியார்மயம் ஆக்கிவிடலாம் என்றனர், சிலர் டாஸ்மாக்கின் கட்டமைப்பையே மாற்றலாம், சிலர் டாஸ்மாக்கையே எடுத்து விடலாம் என்று பேசினர்.
எங்களுக்குள் நடந்த கலந்துரையாடலில் ரெஸ்டோ பார் என்பதை மட்டுமே எப்படியோ யாரோ வெளியில் சொல்லி இருக்கின்றனர். அது பேசுபொருளாகி விட்டது’’ இவ்வாறு அமைச்சர் விக்னேஷ் கூறினார்.
