தமிழகத்தைப் பொறுத்தளவில் தி.மு.க, அ.தி.மு.க. மாறி மாறி ஆட்சிக்கு வந்தபோது, அவர்களுக்கு வேண்டப்பட்ட மதுபான தொழிற்சாலைகளில் இருந்து அதிக சரக்குகள் வாங்குவது வழக்கம். ஆனால், அந்த வழக்கத்தை முறியடித்திருக்கிறார் முதல்வர் விஜய்!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலமாக மதுபான விற்பனை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உள்ளன. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு அமைந்துள்ள நிலையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை டாஸ்மாக் நிர்வாகத்திலும் மேற்கொண்டு வருகிறது.
டாஸ்மாக் கடைகளை பொறுத்தவரை 11 நிறுவனங்களிடம் இருந்து டாஸ்மாக் மதுபானங்கள் வாங்கப்படுகின்றன. பீர்களை பொறுத்தவரை 6 நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. எந்த நிறுவனங்களின் மது அதிகம் விற்பனை செய்யப்படுகிறதோ.. அந்த மதுபானம் அதிகம் கொள்முதல் செய்யப்படும் நடைமுறை தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. இதன்படி பார்த்தால் குறிப்பிட்ட நிறுவனங்களின் மதுவகைகள் மட்டும் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை கொள்முதல் செய்யப்படுகின்றன.
தற்போது இந்த நடைமுறையில்தான் மாற்றம் கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த மாதம் முதல் வாரத்தில் டாஸ்மாக் நிர்வாக கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், குறிப்பிட்ட நிறுவனங்களிடம் இருந்து அதிக அளவில் மதுபானங்கள் கொள்முதல் செய்யாமல் அனைத்து நிறுவனங்களில் இருந்தும் சரிசமமாக கொள்முதல் செய்ய வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
தமிழ்நாடு அரசுக்கு டாஸ்மாக் மூலமே பெரும் வருவாய் கிடைக்கிறது. டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் 140 ரூபாய் குவாட்டர் பாட்டிலில் 100 ரூபாய்க்கு மேல் அரசுக்கு வரியாக செல்வதாக தரவுகள் கூறுகின்றன. டாஸ்மாக் வாயிலாக கிடைக்கப்பெரும் இந்த வரியே அரசின் மிகப்பெரிய வருமானமாக இருக்கிறது. அதன் பிறகே, ஜிஎஸ்டி, சொத்து வரி, பத்திப்பதிவு, வணிக வரி போன்றவை உள்ளன. அரசின் 2 லட்சம் கோடி வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு வருமானம் டாஸ்மாக் மூலமே கிடைக்கும் நிலையில், இந்த துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் மிகவும் முக்கியத்துவம் ஒன்றாக அமைந்துள்ளது.
