“முதல்வர் விஜய்யின் குதிரை பேர அரசியல் குறித்து ஆளுநர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவோம். அதிமுகவின் எச்சில் இலைகளை சேர்த்துக்கொண்டுள்ள முதல்வர் விஜய், கொத்து பரோட்டா என்றெல்லாம் கொச்சையாக பேசுவதா?” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரூரில் முதல்வர் விஜய் பேசியது தொடர்பாக உச்ச நீதிமன்ற வழிகாட்டல் படி ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக் குழுவிடமும், சிபிஐயிடமும் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதல்வர் விஜய் குதிரைபேர ஊழலில் ஈடுபட்டு உள்ளார் என்பதை வைகோ அளித்த வாக்குமூலம் அடிப்படையில் ஏற்கனவே கடந்த 4-ம் தேதி ஆளுநரை சந்தித்து ஆதாரத்தோடு புகார் அளித்தோம்.
அதேபோல எம்.ஆர்.விஜயபாஸ்கரும் வெளிப்படையாகவே செய்தியாளர் கூட்டத்திலே, என்னை தவெகவில் வந்து சேரும்படி கேட்டுக்கொண்டார்கள், ஆகவேதான் நான் ராஜினாமா செய்கிறேன் என்று சொல்லி, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவரும் சேர்ந்துவிட்டார். ஆக இதெல்லாம் குதிரைபேர ஊழலுக்கு தகுந்த ஆதாரங்கள் என்பதை சுட்டிக்காட்டி ஆளுநரிடத்தில் இன்று மீண்டும் ஒருமுறை திமுகவின் சார்பில் புகார் கொடுத்திருக்கிறோம்.
விஜய் பேசும் போது ‘கொத்து பரோட்டா’ என்றெல்லாம் கொச்சையாக பேசுகிறார். கரூர் விஜய பாஸ்கர், விராலிமலை விஜயபஸ்கர் ஆகிய இருவருமே நாங்கள் சாப்பிட்டுப் போட்ட இரண்டு இலை தான், அதை தவெகவில் இணைத்துக் கொண்டுள்ளனர் என அதிமுகவினரே விமர்சித்து உள்ளனர். ஆகவே எச்சில் இலையை வைத்து ஒரு விழா நடத்துகிறார்.
அதில் ஏற்கனவே வெளியிட்ட கரூர் அறநிலையத்துறை நிலம் தொடர்பான அரசாணையை, ஏதோ இவரிடம் கோரிக்கை வைத்து அதன் பிறகு வெளியிடுவது போல ஒரு நாடகத்தை நடத்தி காட்டியுள்ளார். இந்த நாடகம் நடந்தது 10-ம் தேதி. ஆனால் 9-ம் தேதியே அதற்கான அரசாணை போடப்பட்டுவிட்டது. இது எவ்வளவு பெரிய பித்தலாட்டம் எவ்வளவு பெரிய நாடகம்.
ஆக இப்படிப்பட்ட நாடகங்களை இவர்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் முடிவுகட்டுகிற வகையில் திமுக நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். குதிரை பேர புகாரின் பேரில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவோம்” என்று தெரிவித்தார்.
பெண்களின் பாதுகாப்பு, போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்தத் தவறிய; குதிரை பேரத்தை ஊக்குவித்து வருகின்ற தவெக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை; போதைப் பொருட்கள் தங்குதடையின்றி புழக்கம்; சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்படாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால், கடந்த திமுக ஆட்சியில் மக்கள் சுதந்திரமாக வாழ முடியாமல் பரிதவித்தனர். இந்நிலையில், நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, தட்டுத் தாடுமாறி ஆட்சியில் அமர்ந்துள்ள தற்போதைய பொய்க்கால் குதிரை அரசு, கடந்த ஆட்சியின் மீட்சியாகவே இருக்கிறது என்பதற்கு பல்வேறு உதாரணங்களைச் சொல்லலாம்.
அண்மையில், திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டம், லால்குடி தொகுதி, புள்ளம்பாடி ஒன்றியம், சிறுகளப்பூர் பகுதியில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்விஷயத்தில் தவெக அரசு துரித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். அதேபோல், போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் போதிய அக்கறை காட்டப்படவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இச்செயல் ஆட்சியாளர்களின் அலட்சியத்தையும், மெத்தனப் போக்கையுமே காட்டுகிறது. இதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்தாத; போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்தத் தவறிய; குதிரை பேரத்தை ஊக்குவித்து வருகின்ற தவெக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில், 18.7.2026 சனிக் கிழமை காலை 10 மணியளவில், புள்ளம்பாடி அண்ணா திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தலைமையிலும்; திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் கூ.சூ. சிவக்குமார் முன்னிலையிலும் நடைபெறும். பெண்கள் நலனையும், மக்கள் நலனையும் முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு தரப்பட்ட மக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
