திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீதான நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று ஜூலை 13-ந் தேதி மேல்முறையீடு செய்துள்ளது.

திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த எ.வ.வேலு மீது அறப்போர் இயக்கம் ஊழல் புகார் அளித்தது. அதில், ”திருப்பூர், கரூர் ஆகிய இடங்களில் நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்த பணி மேற்கொள்ளாமலேயே பல கோடி ரூபாய் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளது” என குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. மேலும், எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் ஜூன் 25-ந் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதனிடையே சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தம் மீதான எப்.ஐ.ஆர்-ஐ மற்றும் லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எ.வ.வேலு மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை ஜூலை 9-ந் தேதி விசாரித்த நீதிபதி இளந்திரையன், எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்தார்.அத்துடன் ஜூலை 28-ந் தேதி வரை, எ.வ.வேலு மீது எவ்வித கடுமையான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை அவசரமாக நாளை ஜூலை 14-ந் தேதி விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு முன்பாக தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதனை தலைமை நீதிபதி சூர்யா காந்த் ஏற்க மறுத்துவிட்டார். மேலும், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்பது தொடர்பாக நாளை மறுநாள் பரிசீலனை செய்வதாகவும் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal