கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், எஸ்.பி.வேலுமணியும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறாராம். எஸ்.பி.வேலுமணியிடம் தி.மு.க. , த.வெ.க. என இரண்டு தரப்பும் தங்கள் கட்சியில் இணையுமாறு பேச்சு வார்த்தை நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
தவெக ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் ஒப்புதல் இன்றி, சி.வி.சண்முகம் தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் ஆதரவளித்திருந்தனர்.இதைத் தொடர்ந்து, சி.வி.சண்முகம் அணிக்கு ஆதரவாக செயல்பட்ட, எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 26 மாவட்ட செயலாளர்களின் பதவிகளை பறித்து, உடனடியாக 17 புதிய மாவட்ட செயலாளர்களை பழனிசாமி நியமித்தார்.
அதனைத் தொடர்ந்து, அந்த மாவட்டங்களில், பழைய மாவட்ட செயலாளர்களிடமிருந்து புதிய மாவட்ட செயலாளர்கள் போராடி அலுவலக சாவியை பெற்றனர். இந்நிலையில் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்ளிட்ட 6 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டனர். சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் தவிர மற்றவர்கள் தவெகவில் இணைந்து விட்டனர்.
இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ‘‘கட்சி பதவி பறிக்கப்பட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் மன்னிப்பு கடிதம் கொடுத்து திரும்பி வந்த நிலையில், அவர்களுக்கு பழைய பதவிகளை கொடுக்க வேண்டும்’’ என பழனிசாமியிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
அதை பரிசீலித்த பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி ஏற்கெனவே தலைமை நிலைய செயலாளர், மாவட்ட செயலாளர் பதவிகளை வகித்து வந்த நிலையில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுத்தார். மேலும், மாநில நிர்வாகிகள் பலருக்கு புதிய பதவிகளை கொடுத்தார்.
ஏற்கெனவே 26 மாவட்ட செயலாளர்களிடம் பதவிகள் பறிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு மீண்டும் அதே பதவி கொடுக்காமல், அதிகாரமில்லாத மாநில பதவி கொடுக்கப்பட்டதாக எஸ்.பி.வேலுமணி அதிருப்தியில் இருந்தார்.
இந்நிலையில், தொண்டாமுத்தூரில் நேற்று முன்தினம், அதிமுக கொடி, சின்னம், பழனிசாமி படம் எதுவும் இன்றி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில், பதவி பறிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மீண்டும் பதவி வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கூட்டத்தின் முடிவில், செய்தியாளர்களிடம் பேசிய வேலுமணி, ‘‘ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்திருந்தால், அதிமுக பலமாக இருந்திருக்கும்’’ என கருத்து தெரிவித்திருந்தார். இதன்மூலம் மீண்டும் பழனிசாமிக்கு எதிராக வேலுமணி செயல்பட தொடங்கி இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் தொடர்ச்சியாக, ‘‘எனது ஆதரவாளர்கள் இல்லாமல் நான் இல்லை. அதனால் எனது ஆதரவாளர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பழைய பதவிகளை மீண்டும் வழங்க வேண்டும்’’ என பழனிசாமிக்கு நெருக்கமான தலைவர்கள் மூலமாக வேலுமணி தகவல் சொல்லி அனுப்பி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் கொங்குமண்டலத்தில் தி.மு.க.வை வலுப்படுத்தும் விதமாக செந்தில் பாலாஜி களமிறக்கப்பட்டார். தற்போது, ‘உங்களுக்கு உரிய முக்கியத்துவமும், மரியாதையும் கொடுக்கப்படும்’ என செந்தில் பாலாஜி மூலமாக உதயநிதி ஸ்டாலின் நேரடியாக எஸ்.பி.வேலுமணியிடம் பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. எஸ்.பி.வேலுமணி தி.மு.க. பக்கம் வந்துவிட்டால், மீண்டும் செந்தில் பாலாஜி கரூருக்கே சென்றுவிடுவார். ஏற்கனவே, கரூர் தொகுதியை அ.தி.மு.க. கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம், த.வெ.க.வுக்கு சென்றால் உரிய முக்கியத்துவம் கிடைக்குமா? என யோசித்து வருகிறாராம் எஸ்.பி.வேலுமணி. காரணம், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், அருண்ராஜ், சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆகியோருக்கு அடுத்துதான் எஸ்.பி.வேலுமணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். எனவே, தி.மு.க.வா? த.வெ.க.வா? என யோசித்து வருகிறாராம் எஸ்.பி.வேலுமணி!
