சட்டமன்றத் தேர்தலுக்கு முன், ‘த.வெ.க. ஒரு தூயசக்தி… மக்கள் பணத்தை ஒரு பைசா கூட தொடமாட்டேன்… தொடவும் விடமாட்டேன்..!’ என வாக்குறுதி கொடுத்து ஆட்சிப் பொறுப்புக்கு வந்த விஜய், அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அமைச்சர்களுக்கு ஒரு விஷயத்தில் ‘ஸ்ட்ரிக் ஆர்டர்’ போட்டிருக்கிறாராம்!

இது பற்றி கோட்டை வட்டாரத்தில் பேசினோம்… ‘‘சார், ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே நிர்வாகத்தில் எந்தவித தொய்வும் இருக்கக் கூடாது என்பதில் முதலமைச்சர் விஜய் மிகவும் கறாராக இருந்து வருகிறார்.

குறிப்பாக, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் அமைச்சர்கள் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், மக்கள் நலத் திட்டங்கள் தாமதமின்றி மக்களைச் சென்றடைய வேண்டும் என்றும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறாராம். அதுமட்டுமல்ல, பொதுவெளியில் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை என்றும், தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கி அரசுக்குக் கெட்ட பெயரைத் தேடித் தரக்கூடாது என்றும் ஆரம்பத்திலேயே அலர்ட் செய்திருந்தததார். அதனால்தான் அமைச்சர்கள் பலரும் கொஞ்சம் சைலண்ட் மாறியிருக்கிறார்கள்.

முதலமைச்சரின் இந்த கண்டிப்பு, அமைச்சர்கள் மத்தியில் ஒருவித பயத்தையும் பொறுப்பையும் நிச்சயம் ஏற்படுத்தும் என்றும், தங்களின் செயல்பாடுகள் நேரடியாகக் கண்காணிக்கப்படுகிறது என்ற உணர்வு, அவர்களை இன்னும் சுறுசுறுப்பாக வேலை செய்ய வைக்கும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், முதலமைச்சர் விஜய் மிகத் தீவிரமான தடை உத்தரவு ஒன்றை அமைச்சர்களுக்குப் பிறப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதாவது அடுத்த 6 மாதங்களுக்கு அமைச்சர்கள் வழக்கமான கோப்புகளை தவிர, வேறு எந்தப் புதிய கோப்புகளிலும் கையெழுத்து போடக்கூடாது என்று ஸ்டிரிக்ட் உத்தரவு பிறப்பித்திருக்கிறாராம்.

இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.. கடந்த ஆட்சியில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள் பலர், இப்போது தவெக அரசையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள அணுகி வருவதாக தெரிகிறது. அமைச்சர்கள் யாரும் அவர்களுக்கு தெரியாமல், அவசரப்பட்டு புதிய ஒப்பந்தங்களை வழங்கிவிடக் கூடாது என்பதில் முதலமைச்சர் விஜய் மிகவும் உறுதியாக இருக்கிறார். பழைய ஒப்பந்ததாரர்களுக்கு ஏதாவது புதிய ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டால், அது இந்த புதிய அரசுக்குத் தேவையற்ற பெருத்த தலைவலியை ஏற்படுத்தி விடுவதுடன், மக்கள் மத்தியில் அரசுக்கு இருக்கும் நற்பெயரைக் கெடுத்துவிடும் என்பதால், இப்படியொரு தடை உத்தரவை முதலமைச்சர் பிறப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது’’ என்றனர்.

எதிர்க்கட்சிகளின் குதிரை பேர அரசியல் குற்றச்சாட்டு ஒருபுறம், நிர்வாகத்தை தூய்மையாக, பவர் ஃபுல்லாக வைத்திருக்க வேண்டிய கட்டாயம் மறுபுறம் இருப்பதால் முதலமைச்சர் விஜய் ஒவ்வொரு மூவ்களையும் மிகவும் யோசித்து எடுத்து வருகிறாராம்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal