சட்டப் பேரவை நடவடிக்கைகள், செயல்பாடுகள் தொடர்பான பயிலரங்கை முதலமைச்சர் ஜோசப் விஜய் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டமன்றத் தேர்தலில், த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 50 சதவீதத்திற்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்கள் புதுமுகங்கள் என்பதால், சட்டசபை நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று மற்றும் நாளை (17-ம் தேதி) சென்னை கலைவாணர் அரங்கம் மூன்றாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை சார்பில் எம்.எல்.ஏ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. அந்தவகையில், பேரவை நடவடிக்கைகள், செயல்பாடுகள் தொடர்பான பயிலரங்கை முதலமைச்சர் ஜோசப் விஜய் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்த பயிற்சி முகாமில், அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கடரமணன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், மரிய வில்சன், விஸ்வநாதன், ராஜேஷ் குமார், பிரபு, தமிழன் பார்த்திபன், சட்டமன்ற தலைவர் ஜேசிடி பிரபாகர், துணைத் தலைவர் ரவிசங்கர், கொறடா சபரிநாதன் மற்றும் 100 க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த புத்தாக்க பயிற்சி நடைபெறுகிறது. குறிப்பாக இந்த இரண்டு நாட்கள் பயிற்சியில், சட்டமன்றத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், அவை மரபுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
17-வது சட்டசபையின் முதல் கூட்டம் ஆளுநர் அர்லேகர் உரையுடன் நாளை மறுநாள் (18-ஆம் தேதி) கூட இருக்கிறது. அதற்கு முன்னதாக, இந்த புத்தாக்க பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எம்.எல்.ஏக்களுக்கான பயிற்சி – 104 எம்.எல்.ஏக்கள் மட்டுமே பயிற்சி நிகழ்வில் பங்கேற்றனர். திமுக புறக்கணிப்பு செய்திருக்கிறது. அதிமுக சார்பில் சங்கராபுரம் எம்எல்ஏ ராகேஷ் மட்டும் வருகை புரிந்திருக்கிறார் பாமக தரப்பில் சௌமியா அன்புமணி பங்கேற்பு, மதிமுக தரப்பில் செந்தில் செல்வன், ராஜேந்திரன், விசிக தரப்பில் அமைச்சர் வன்னிஅரசு, பாஜக சார்பில் நீலகிரி எம்எல்ஏ போஜராஜன் பங்கேற்றனர்.
