கடந்த தி.மு.க. ஆட்சிகாலத்தில் பொதுப்பணித்துறை, நகர்ப்புற வளர்ச்சித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை என அனைத்துத் துறை டெண்டர்களிலும் லஞ்சம் தலைவிரித்தாடியதாக முதல்வர் விஜய்க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ரகசிய குழு ஒன்றை அமைத்து, முறைகேடுகளை புள்ளிவிபரங்களுடன் கேட்டுப் பெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இது பற்றி முதல்வருக்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசியபோது, ‘‘தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, தொழில்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நீர்வளத் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை, பள்ளிக்கல்வித் துறை உள்ளிட்ட பல முக்கிய துறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த துறைகளுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பணிகளில் பெரும்பாலானவை டெண்டர் முறையின் மூலம் தனியார் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்படுவது வழக்கம்.
சாலை அமைத்தல், பாலம் கட்டுதல், குடிநீர் திட்டங்கள், பள்ளி மற்றும் மருத்துவமனை கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஒப்பந்த அடிப்படையில் செயல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சில துறைகளில் டெண்டர் ஒதுக்கீடுகளில் முறைகேடுகள் நடந்ததாகவும், குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே பணிகள் வழங்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. மேலும் சில பணிகளில் கமிஷன் பரிவர்த்தனைகள் நடைபெற்றதாகவும் அரசுத் தரப்பில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ள முதல்வர் விஜய், அரசுப் பணிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். குறிப்பாக டெண்டர் ஒதுக்கீடுகளில் அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை அவர் வலியுறுத்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாக, பல்வேறு துறைகளில் பணியாற்றும் நேர்மையான அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை தேர்வு செய்து சிறப்பு ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் கடந்த ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட டெண்டர்கள், ஒப்பந்தங்கள், பணிகள் நிறைவேற்றப்பட்ட விதம் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்து வருகின்றன. துறை வாரியாக சேகரிக்கப்படும் தகவல்கள் அந்தந்த துறைகளின் செயலர்கள் மூலம் தொகுக்கப்பட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. குறிப்பாக பெரிய அளவிலான கட்டுமானப் பணிகள், உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆய்வு குழுக்கள் அளிக்கும் அறிக்கைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமா, அல்லது இது நிர்வாக ரீதியான மதிப்பீடாகவே இல்லாமல், தவறுசெய்த மாஜிக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’’ என்றனர்.
வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கும், கடந்த ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விவாதங்களுக்கும் பதிலளிக்கும் வகையில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் வருகிறது.
கடந்த முறை சட்டமன்றத்தில் உதயநிதியின் பேச்சு, ஒரு பேசு பொருளாக அமைந்தது. உதயநிதியின் பேச்சுக்கு முதல்வர் விஜய்யால் பதிலடி கொடுக்க முடியவில்லை. இதுபற்றி ஆ.ராசா கூட கடுமையாக விமர்சித்தார். அதாவது, ‘சட்டமன்றத்தில் உங்களது முகத்தைப் பார்த்தேன். அதே சமயம் திருச்சி நன்றி அறிவிப்பு கூட்டத்தில் மட்டும் உங்களுக்கு எப்படி வீரம் வந்தது?’ என்ற வகையில் பேசினார். இதற்கொல்லாம் பதிலடி கொடுக்க ஆயத்தமாகி வருகிறார் விஜய்.
வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் உதயநிதியின் பேச்சு பதிலடி கொடுக்கும் வகையிலும், ‘மாஜி’க்களின் ஊழல்களை புள்ளி விபரங்களுடன் சட்டப் பேரவையில் பேசவும் த.வெ.க. அரசு தயாராகி வருவதுதான் அறிவாலயத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
