தி.மு.க.வின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கும் முடிவை கர்நாடக மாநிலம் குடகு மலையில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் எடுத்திருக்கிறார். அதே போல் அ.தி.மு.க.விலும், ‘வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்கள் தலைவர்களே!’ – அதிமுகவுக்குள் எழுந்திருக்கும் புதிய கோஷம் எழுந்திருக்கிறது.
தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தகர் அணி செயலாளர் மகேந்திரன் தற்கொலையை சுட்டிக்காட்டி, “தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களை இனியும் மனவேதனை அடையவிடாதீர்கள். வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்“ என அதிமுக ஐடி விங் மாநிலச் செயலாளர் ராஜ் சத்யன் போட்ட பதிவு அதிமுக வட்டாரத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.
தனது பதிவில், அதிமுக இரண்டுபட்டு நிற்க காரணமானவர்களையும் சாடி இருந்த ராஜ் சத்யன், என்ன காரணத்தினாலோ சில மணி நேரத்திலேயே தனது பதிவை நீக்கிவிட்டார். இது பற்றி ஐ.டி.விங்கில் உள்ள சிலரிடம் பேசியபோது, “ஜெயலலிதா காலத்தில் யாரும் தனிக்காட்டு ராஜாவாக ஆட்டம்போட முடியாது. அப்படி ஆட்டம் போட்ட சிலரை அட்ரஸே இல்லாமல் செய்தவர் ஜெயலலிதா.
ஆனால், இப்போது அப்படி இல்லை. பழனிசாமி கட்சிக்கு விசுவாசமான அனைவரையும் அரவணைத்து கட்சியை கொண்டு செலுத்த நினைக்கிறார். ஆனால், மாவட்ட பொறுப்பாளர்களில் பெரும்பகுதியினர் குறுநில மன்னர்கள் போல் செயல்படுகிறார்கள். அதனால் கட்சிக்குள் புதியவர்களின் வருகையே கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது.
எடப்பாடியின் நிழலாக வலம் வருபவர் முசிறியில் உள்ள தனது கல்லூரியில் அமர்ந்து கொண்டு, திருச்சி மாவட்டத்தில் செய்யும் ‘சாதி’ அரசியல் முத்தரையர் சமுதாயத்தினரை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கி, இன்றைக்கு பெரும்பான்மையாக இருக்கும் முத்தரையர் சமுதாயத்தினர் த.வெ.க.வை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், வேலுமணி, விஜயபாஸ்கர் போன்றவர்கள் எல்லாம் 20 வயதில் கட்சிக்குள் வந்தவர்கள். ஆனால், இன்றைக்கு அப்படி யார் வருகிறார்கள்? இளைஞர் களுக்காகவே ஆரம்பிக்கப்பட்ட இளைஞர் – இளம்பெண்கள் பாசறையிலேயே ஐம்பது வயதைக் கடந்தவர்கள் தான் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தவிர, இன்றைக்கு இளைஞர்கள், இளம்பெண்கள் பாசை இருக்கும் இடமே தெரியாமல் இருக்கிறது.
புதிதாக தொடங்கப்பட்ட விளையாட்டு அணிக்கு மாநிலச் செயலாளரே இல்லை. கட்சியில் இருக்கும் 82 மாவட்டச் செயலாளர்களில் 10 பேர் கூட இளைஞர்கள் இருக்க மாட்டார்கள். தற்சமயம் கட்சியில் 20 சதவீதம் பேர் இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பொறுப்புகளைக் கொடுத்து செயல்படவிட்டால் தான் அவர்கள் இன்னும் 20 சதவீதம் இளம் சகாக்களை உள்ளே கொண்டு வருவார்கள்.
தவெக-வுக்கு எவ்வித கட்டமைப்பும் இல்லை. ஆனால், கட்டுக்கடங்காத இளைஞர் கூட்டம் அங்கே இருக்கிறது. தேர்தல் சமயத்தில் வாக்குச் சாவடிக்கு வெளியில் இருந்த பூத்களில் அதிமுக பூத்களில் 60 வயதைக் கடந்தவர்கள் தான் தூங்கிக் கொண்டிருந்தார்கள். தவெக பூத்களில் இளைஞர்கள் டேபிள் மீது ஏறிக் குதித்துக் கொண்டு இருந்தார்கள். இந்த எனர்ஜியே அந்தக் கட்சிக்கு 5 சதவீத வாக்குகளைக் கொண்டு வந்து சேர்த்தது.
அதிமுக-வை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பலரும் புதியவர்களின் வளர்ச்சியை அவ்வளவாய் விரும்புவதில்லை. இன்றைக்கு அதிமுக ஐடி விங் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்கிறார்கள். ஆனால், தேர்தலுக்கு முன்பு, பழனிசாமி கொடுத்த சில வேலைகளை செய்து முடிக்க மாவட்ட அளவில் எந்த ஒத்துழைப்பும் இல்லை.
பிறகெப்படி ஐடி விங் வேலை செய்யும்? அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு இன்றைக்கு கட்சிக்குள் சண்டை போடுகிறார்கள். ஜெயித்தவர்கள் மட்டும் தான் அதிமுகவா? இதற்கு முன்பு, மற்ற கட்சிகளை திட்டுவோம். கடந்த பத்து வருடங்களாக எங்களோடு இருந்தவர்களை திட்டவே எங்களுக்கு நேரம் போதவில்லை. முன்பு, ஓபிஎஸ், சசிகலாவை திட்டினோம். பிறகு, செங்கோட்டையனை திட்டினோம். இப்போது சி.வி.சண்முகத்தையும் சி.விஜயபாஸ்கரையும் திட்டிக் கொண்டிருக்கிறோம்.
ரீல்ஸ் போட்டு ஏதோ ஒரு தேர்தலில் ஜெயித்துவிட்டார்கள் என்பதற்காக நாமும் இப்போது அந்த வழிக்குப் போக வேண்டியதில்லை. ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்த சமயத்தில் மதுரைக்காரர்கள் விமானத்தையே மறித்தார்கள். மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது அவர் திருச்சி விமான நிலையத்தை விட்டு வெளியில் வரமுடியாதபடிக்கு தாக்குதல் நடத்தினார்கள். உணர்வுமிக்க அந்தக் கூட்டத்தை எல்லாம் இப்போது தொலைத்துவிட்டு நிற்கிறது அதிமுக. அதனால் தலைமைக் கழகம் ஏதாவது போராட்டம் அறிவித்தால் ஓரமாய் நின்று கோஷம் போட்டுவிட்டுப் போகிறார்கள். அதற்குள்ளாகவே அந்தக் கூட்டத்தில் இருக்கும் பலருக்கு தலை சுற்றல் வந்து மயங்கிவிடுகிறார்கள்.
மேகேதாட்டு பிரச்சினைக்காக பி.ஆர். பாண்டியன் ஆட்களை திரட்டிக் கொண்டு கர்நாடகாவுக்குப் போகிறார். நியாயமாகப் பார்த்தால் இந்தப் பிரச்சினையை அதிமுக கையில் எடுத்திருக்க வேண்டும். ஏனென்றால், பெயரளவுக்குத்தான் இன்றைக்கு திமுக எதிர்க்கட்சி. கூட்டணிக் கட்சிகள் எல்லாமே அந்தக் கட்சியை கைகழுவிவிட்டன. அதனால் உண்மையான எதிர்க்கட்சி அதிமுக தான். மக்கள் பிரச்சினைகளை கையிலெடுத்து ஆங்காங்கே அதிமுக-வினர் போராட்டங்களை முன்னெடுத்தால் தான் உள்ளாட்சித் தேர்தலுக்கு தொண்டர்களை தயார்படுத்த முடியும். இல்லாவிட்டால் எஞ்சி இருக்கும் அதிமுக-வினரும் தவெக-வை நோக்கிப் புறப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் அ.தி.மு.க.வின் சீனியர்கள் கட்சியைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், வருமானம் எப்படி வரும் என்ற யோசனையிலேயே இருப்பதால்தான் கட்சி இன்றைக்கு இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது’’ என்றனர்.
நெருப்பில்லாமல் புகையுமா..?
