அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுயநலத்தால் இன்றைக்கு அ.தி.மு.க. கரைந்துகொண்டிருக்கிறது. கொக்கு காத்திருப்பதுபோல் காத்திருந்து ஒவ்வொருவரையாக ‘தூக்கி’ வருகிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

தமிழகத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட கட்சி, 4 முறை பிரதான எதிர்க்கட்சி என தமிழக அரசியலில் கோலோச்சிய அதிமுக-வை மெல்ல மெல்ல கரைத்துக் கொண்டிருக்கிறது புதிதாக முளைத்திருக்கும் இன்னொரு நடிகரின் கட்சியான தவெக. “கணிசமான அதிமுக தொண்டர்களும் தவெக-வில் இணையத் தயாராகி விட்டார்கள். இன்னும் 6 மாதத்தில் ஒட்டுமொத்த அதிமுக முக்கிய நிர்வாகிகளும் தவெக-வில் இணைவார்கள்” என்று அடித்துச் சொல்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.

தேர்தலுக்கு முன்பே கூட்டணி வைக்க தவெக-வும் அதிமுக-வும் பரஸ்பரம் விரும்பின. அது நடந்திருந்தால் இன்றைக்கு நிலைமையே வேறாக இருந்திருக்கும். ஆனால், இரண்டு கட்சிகளின் தலைவர்களுமே, ‘நானே முதல்வர்’ என்று ஆளுக்கொரு பக்கம் நர்த்தனம் ஆடியதால் அந்த எண்ணம் கைகூடாமல் போனது. இருப்பினும், ‘பின்னால் தேவைப்படலாம்’ என்ற ‘மனக்’ கணக்கு இருந்ததாலேயே பிரச்சாரத்தில் இரண்டு கட்சிகளும் ஒருவரை ஒருவர் அதிகம் சாடிக்கொள்ளவில்லை. தேர்தல் முடிவுகள், இரண்டு கட்சிகளுக்கும் அப்படியான ஒரு நகர்வை நோக்கிச் செல்லவும் வழிகாட்டின.

ஆனால் ஈகோ இடம் தராததால், அதிமுக-விடம் ஆதரவு கோராமல் காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகள் பக்கம் வண்டியைத் திருப்பினார் விஜய். அவர் அழைத்தாலும் தனக்கு முதல்வர் நாற்காலி நிச்சயமில்லை என்பதால் பழனிசாமியும் தவப்புதல்வரின் பேச்சைக் கேட்டு திமுக தயவில் அரியணை ஏறும் ‘தற்கொலை’ திட்டத்துக்கு தலையாட்டினார்.

இந்த நிலையில், பழனிசாமியின் இந்த நகர்வையே காரணம் காட்டி சி.வி.சண்முகம் தலைமையில் 25 அதிமுக எம்எல்ஏ-க்கள் விஜய் அரசுக்கு ஆதரவுக்கரம் நீட்டினார்கள். தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸில் ஒரு கோஷ்டி எப்படி விஜய்க்கு ‘ஜே’ போட்டதோ அதேபோல் தேர்தலுக்குப் பிறகு, அதிமுக-விலும் ஒரு கோஷ்டி விஜய் பக்கம் சாய்ந்தது.

அதிமுகவில் இருந்து தவெகவுக்கு வந்த அமைச்சர் செங்கோட்டையன், புதிதாக கட்சிக்குள் வந்த லீமா ரோஸ் மூலமாகத்தான் அதிமுக-வை உடைக்கும் இந்த ‘வேலைகள்’ நடப்பதாகவும், செங்கோட்டையன் தனது பழைய பந்தங்கள் மூலம் இதையெல்லாம் ‘முடிப்பதாகவும்’, வாரியம், உள்ளாட்சி உள்ளிட்ட பதவிகளைத் தருவதாகச் சொல்லி அமைச்சர் ஆதவ் இந்த ‘அசைன்மென்ட்களை’ செய்வதாகவும் தினுசு தினுசாக செய்திகளைத் திணிக்கிறார்கள். இந்த வேலைகள் எல்லாம் யார் சொல்லி, எதற்காக, யாரால் நடத்தப்படுகிறதோ தெரியவில்லை. ஆனால், “அரசியலுக்கு புதியவராக இருந்தாலும் ராஜதந்திரமாகச் செயல்படுகிறார்” என எல்லாப் புகழையும் விஜய் தலையில் தூக்கி வைக்கிறார்கள்.

தேர்தல் முடிவுகள் வெளியானதுமே, பாஜக உடனான கூட்டணி முடிந்துவிட்டதாக பட்டு கத்தரித்ததுபோல் அறிவித்துவிட்டது அதிமுக. அடுத்த தேர்தலுக்கு அதிமுக கமலாலயத்தின் கதவுகளைத் தட்டுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதனால் அதிமுக தனித்துக் களமிறங்க தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

2026 தேர்தலில் திமுக-வோடு நின்ற கட்சிகளில் தேமுதிக, மமக, மதிமுக உள்ளிட்ட சிறு கட்சிகளை தவிர பிரதானக் கட்சிகள் எல்லாம் தவெக பக்கம் ‘தந்திரமாக’ ஒதுங்கிவிட்டன. எனவே, 2029 தேர்தலை திமுக-வும் தனித்தே சந்திக்க வேண்டும் அல்லது பாஜக கூட்டணியை மீண்டும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். 2024 மக்களவைத் தேர்தலில் ‘தனித்துப் போட்டி’ என்றதும் வேட்பாளர்கள் கிடைக்காமல் அல்லாடிப் போனது அதிமுக. விளைவு, 9 தொகுதிகளில் மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்ட அந்தக் கட்சி, 7 தொகுதிகளில் காப்புத் தொகையையும் காவுகொடுத்தது.

இந்த நிலையில், 2029 மக்களவைத் தேர்தலில் மீண்டும் அதிமுக தனித்துப் போட்டியிட்டால் நிலைமை என்னாகும்… அதற்கு முன்னதாக வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மேயர், நகராட்சித்தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி வாக்குப் பதிவு நடக்கலாம் என்று வரும் செய்திகளும் அதிமுக வட்டாரத்தை ஆனந்தப்பட வைத்திருக்கிறது. அப்படி வந்தால் ‘விசில்’ பலத்தில் நிச்சயம் உள்ளாட்சிப் பதவிகளை கைப்பற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் பலரும் தற்போது தவெக-வை நோக்கி நகரத் தயாராகி வருகிறார்கள். இதை மனதில் வைத்தே, அந்த 6 மாத கெடுவை வைத்திருக்கிறார் அமைச்சர் ஆதவ்.

இது பற்றி அ.தி.மு.க.வின் சீனியர்களிடம் பேசினோம். ‘‘சார், ஜெ.மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க.விலிந்து முதல்பிளவை டி.டி.வி.தினகரன் ஏற்படுத்தினார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வில் ஐக்கியம் ஆகிவிட்டனர். அடுத்து, ஓ.பி.எஸ். ஒரு பிளவை ஏற்படுத்தினார். அவருடைய ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் தி.மு.க.வுக்குச் சென்றுவிட்டனர். 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் இணைந்து ஒரு பிளவை ஏற்படுத்தினார்கள். இவர்களது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வில் இணைந்துவிட்டனர்.

ஆக மொத்தத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியையும், நிர்வாகிகளையும் கட்டுக்கோப்பாக தன் கட்டுப்பாட்டில் வைக்கத் தவறியதும், அவரது சுயநலமும்தான் இன்றைக்கு அ.தி.மு.க.வை கரைத்துக்கொண்டிருக்கிறது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் அ.தி.மு.ன. ஒரு ‘லெட்டர் பேட்’ கட்சியாக மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை’’ என்று ஆதங்கப்பட்டனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal