த.வெ.க.வில் இணைந்து அமைச்சர் பதவி பெற முயற்சித்த அ.தி.மு.க.வின் ‘மாஜி’ அமைச்சர்களின் கனவு பலிக்காமல் போய்விட்டது. இதன் பின்னணியில் பா.ஜ.க. மேலிடம் இருப்பதால், த.வெ.க.வும் தயங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தி.மு.க.வில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

அதிமுகவின் 4 எம்எல்ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தலைமை செயலகத்தில் வைத்தே அவர்கள் 3 பேரும் தவெகவில் இணைந்தனர். அதிமுகவில் மேலும் பல மூத்த நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருகிறார்கள். முன்னாள் அமைச்சரும், விராலிமலை எம்எல்ஏவுமான விஜயபாஸ்கர் தவெகவில் இணைவதற்கு முயற்சித்து வருகிறார். அவரை தவெகவில் இணைவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதன் பின்னணியில் ‘டெல்லி’ உள்ளது.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி அணி இணைந்துவிட்டனர். ஆனால் சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை. இருவருமே அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைவார்கள் என்று கூறப்பட்டது. சி.வி. சண்முகம் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக சொல்லவில்லை. ஆனால் விஜயபாஸ்கர் தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்வேன் என்று கூறியுள்ளார்.

அவர் அதிமுகவில் இருந்து விலகுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. தவெகவில் இணைவதற்கு தான் அவர் திட்டமிட்டார். ஆனால் விஜயபாஸ்கரை தவெகவில் இணைப்பதற்கு எதிர்ப்பு நிலவுகிறதாம். இதுகுறித்து தவெக நிர்வாகிகள் கூறுகையில், “அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா மூலம் தவெகவில் இணைய விஜயபாஸ்கர் முயற்சி செய்கிறார். விஜயபாஸ்கர் மீது குட்கா ஊழல், சொத்து குவிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரணையில் உள்ளன. ஊழலுக்கு எதிரானவர்களாகவும், தூய சக்தியாகவும் எங்களை நிலை நிறுத்தியுள்ளோம். ஏற்கனவே ஊழல் பின்னணி கொண்ட அதிமுக மாஜிகளை இணைக்க கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். விஜயபாஸ்கர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் அவரை தவெகவில் இணைப்பது சரியாக இருக்காது.

விஜயபாஸ்கரை தவெகவில் இணைத்தால் ஊழல் குற்றச்சாட்டுகள் தவெக மீது திரும்பும். குட்கா மற்றும் சொத்து குவிப்பு வழக்குகளுடன் கேரளாவின் சில வழக்கிலும் விஜயபாஸ்கர் சிபிஐ விசாரணை வளையத்தில் உள்ளார். ஏற்கனவே பாஜக மேலிடம் நம் மீது கோபத்தில் உள்ளது. விஜயபாஸ்கரையும் தவெகவில் இணைத்து சேர்த்து டெல்லியை மேலும் பகைத்துக் கொள்ள வேண்டாம் என கருதுகிறார்கள்.

விஜயபாஸ்கரால் நமக்கு எந்த பயனும் இல்லை. இருக்கும் பிரச்சனைகளுடன் அதிக சேதாரத்தை சந்திக்க வேண்டியிருக்கும். மக்கள் மத்தியிலும் நம் தூய்மை பிம்பம் உடைந்து பின்னடைவு ஏற்படும். என்று யோசிக்கிறார்கள்’’ என்றனர்.

ஆனால் எவ்வளவு விலை கொடுத்தாவது தவெகவில் இணைய விஜயபாஸ்கர் தீவிரம் காட்டிய நிலையிலும், அவருக்கான ரெஸ்பான்ஸ் த.வெ.க.வில் இல்லாததால், அடுத்த கட்டமாக தி.மு.க.வில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் சி.விஜயபாஸ்கர்.

அதிமுகவில் இருந்தால் எதிர்காலம் இருக்காது என விஜயபாஸ்கர் நினைக்கிறார். விஜயபாஸ்கர் போன்ற திறமையான இளம் வயதுக்காரர்கள் தி.மு.க.வுக்கு தேவை என ஸ்டாலினும் விரும்புவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal