அதிமுக எம்.எல்.ஏ க்கள் கூட்டம் இன்று நடைபெற இருந்த நிலையில் திடீரென ரத்தாகி இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது. ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவிற்குக் கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளை தனிக் கட்சியாக வென்றால் மட்டுமே தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியும்.
ஆனால் தனிக்கட்சியாக 108 இடங்களை த.வெ.க வென்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை கட்சி பெறாததால் கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. இதனால் தவெக அடுத்த கட்ட நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி உள்ளது. இந்தச் சூழலில் தான் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களை சென்னைக்கு வருமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்புவிடுத்திருந்தார்.
அந்தவகையில் இன்று காலை எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதிமுக எம்.எல்.ஏ க்கள் கூட்டம் திடீரென ரத்தாகி இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய்க்கு ஆதரவு அளிப்பதில் கருத்து முரண்பாடு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே சென்னை ஆர்.ஏ.புரத்தில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் இருவரும் ஆலோசனைக்குப் பிறகு ஒரே காரில் புறப்பட்டனர்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் வீட்டில் எஸ்.பி. வேலுமணி இருவரும் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதிமுகவில் ஒரு பிரிவினர் தவெகவை ஆதரிக்க உள்ளதாக வெளியான தகவலை சி.வி. சண்முகம் மறுத்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. தவெகவுக்கு அதிமுக ஆதரவு தரும் விஷயத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சரியான முடிவு எடுக்கவில்லை என்றால் அதிமுகவை இரண்டாக உடைப்பதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.
விஜயின் தவெக கட்சி தொடங்கி 2 ஆண்டுகளிலேயே களம் இறங்கி முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளை வென்று திமுக, அதிமுக இரண்டையும் பின்தள்ளி இருப்பது தமிழ்நாட்டில் இதுவரை கண்டிராத ஒரு அரசியல் திருப்புமுனையாகவே பார்க்கப்படுகிறது. விஜய் கூட்டணி ஆட்சி என அறிவித்திருப்பதால் அவருடன் கூட்டணியில் இணைவதற்காக மற்ற கட்சிகளிடையே போட்டா போட்டி நிலவி வருகிறது.
சி.வி. சண்முகம் தலைமையில் 30க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. சி.வி. சண்முகத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, விஜயபாஸ்கர் போன்றோர் ஆதரவு அளித்திருப்பதாக கூறப்படுவதால் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
தி.மு.க. & காங்கிரஸ் கூட்டணி உடைந்துள்ள நிலையில், அ.தி.மு.க.விலும் அடுத்த பிளவு ஏற்படப்போகிறதோ? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
