தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், குதிரை பேரத்தை தடுப்பதற்காக, தவெக தலைவர் விஜய் தனது கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தவெக முதல்முறையாகத் தனித்துப் போட்டியிட்டுள்ளது. கட்சியின் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுவதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சமீபத்தில் வெளியான பல்வேறு கருத்துக் கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக இருப்பதாகத் தெரிவித்தாலும், கள நிலவரம் தங்களுக்குச் சாதகமாக இருப்பதாக தவெக நம்புகிறது. இச்சூழலில், வெற்றி பெறும் தவெக வேட்பாளர்களை ‘குதிரை பேரம்’ மூலம் தங்கள் பக்கம் இழுக்க திமுக மற்றும் அதிமுக திட்டமிட்டிருப்பதாக விஜய்க்கு ரகசியத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதையடுத்து, விஜய் கடந்த 2 நாட்களாக தனது கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதுகுறித்து தவெக வட்டாரங்கள் கூறியதாவது: ‘‘திமுக, அதிமுகவின் குதிரை பேரம் மூலம் இழுக்கும் நடவடிக்கையை முறியடிக்க சமீபத்தில், 234 தொகுதி வேட்பாளர்களுடனும் விஜய் அவசர ஆலோசனை நடத்தினார்.
“வெற்றிச் சான்றிதழ் பெற்றவுடன் நேராகப் பனையூர் தலைமை அலுவலகத்துக்கு வர வேண்டும்” என அவர் அப்போது உத்தரவிட்டுள்ளார். வாக்குப்பதிவு நாளன்று சில இடங்களில் திமுக, அதிமுகவினர் இடையூறுகளை ஏற்படுத்தக் கூடும் என விஜய்க்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்துதான், தலைமை தேர்தல் அதிகாரியைச் சந்தித்து, வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு கோரி மனு அளிக்குமாறு ஆதவ் அர்ஜுனாவுக்கு உத்தரவிட்டார். அதன்படிதான், அவர் நேற்று மனு அளித்திருந்தார்.
இதையடுத்து, வாக்கு எண்ணிக்கையின் போது ஏதேனும் அச்சுறுத்தலோ, நெருக்கடியோ ஏற்பட்டால், வேட்பாளர்கள் தனக்கு நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என விஜய் தெரிவித்துள்ளார். இதற்காக ஒரு பிரத்யேக எண் வழங்கப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடம், “நமது வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் பத்திரம். அவர்களைப் பாதுகாப்பாகப் பனையூருக்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு” என விஜய் அழுத்தமாகக் கூறியுள்ளார்’’ என்றர்.
