தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை மே 4ம் தேதி வெளியாக இருக்கிறது. ஒரு மாதம் நீடித்து வந்த ‘முதல்வர்’ சஸ்பென்ஸிற்கு விடை கிடைத்துவிடும். ஏதாவது ஒரு கட்சிக்கு மெஜாரிட்டி கிடைத்துவிட்டால் பிரச்னை இல்லை. தொங்கு சட்டசபை அமைந்தால் ஆளுநர் கையில் ‘லகான்’ போய்விடும்!
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பெரிதாக எந்தவொரு சிக்கலும் இல்லாமல் அமைதியான முறையிலேயே தேர்தல் நடந்து முடிந்தது. இந்தச் சூழலில் தான் நாளைய தினம் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. 234 தொகுதிகள் உள்ள நிலையில், அதில் 118 தொகுதிகளில் வெல்லும் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும்.
தமிழகத்தின் அடுத்த 5 ஆண்டுக்கால ஆட்சியைத் தீர்மானிக்கப்போகும் அந்த ‘மேஜிக்’ நம்பரை எட்டப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே உச்சத்தை எட்டியுள்ளது. தமிழக அரசியலில் வழக்கம்போலவே இந்த முறையும் இருமுனைப் போட்டிதான் பிரதானமாக உள்ளது.. திமுக, அதிமுக கட்சிகள் வலுவான கூட்டணியை உருவாக்கியுள்ளது.
இது தவிர சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் களத்தில் உள்ளன. பல்வேறு செய்தி நிறுவனங்கள் நடத்திய எக்ஸிட் போல் முடிவுகள் குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளன. சில சர்வேக்கள் திமுக முன்னிலை வகிக்கும் என்றும், சில அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கணித்துள்ளன. இதன் மூலம் களத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவுவது உறுதியாகியுள்ளது.
வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் எந்த ஒரு கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் பெரும்பான்மை (50% இடங்களுக்கு மேல்) கிடைக்காத சூழல் உருவானால், அது ‘தொங்கு சட்டசபை’, அதாவது Hung Assembly எனப்படும். இத்தகைய சூழலில் தமிழகத்தில் ஆட்சி அமைக்க யாரை அழைப்பது என்பதில் ஆளுநருக்குப் பெரிய பங்கு இருக்கும். ஆளுநர் யாரை முதலில் ஆட்சி அமைக்க அழைக்கிறாரோ அவரே அரசை அமைப்பார்.
சர்க்காரியா கமிஷன் பரிந்துரைப்படி, முதலில் தேர்தலுக்கு முன்பே அமைக்கப்பட்ட கூட்டணிக் கட்சிக்குப் பெரும்பான்மை இருந்தால் அவர்களுக்கு முதல் வாய்ப்பு தரப்படும். அடுத்து அதிகபட்ச இடங்களைப் பெற்ற கட்சிகளுக்கு வாய்ப்பு தரப்படும். அதாவது பெரும்பான்மை பெறவில்லை என்றாலும் பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரும் தனிப்பெரும் கட்சிக்கு வாய்ப்பு தரப்படும்! அடுத்தாக தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பெரும்பான்மையைப் பெறாத கட்சிகள் இணைந்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்கி, ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்தால் அந்தத் தரப்பிற்கு வாய்ப்பு தரப்படும். அடுத்து சில கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு தர, மற்ற கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் சூழல் உருவானால் அவர்களுக்கும் வாய்ப்பு தரப்படும்.
அதேநேரம் இது பரிந்துரை தானே தவிர விதிகள் இல்லை.. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அதிக இடங்களைப் பெற்ற கட்சியைத்தான் ஆளுநர் கட்டாயம் அழைக்க வேண்டும் என்ற விதிமுறை இல்லை. “யாரால் நிலையான ஆட்சியைத் தர முடியும்” என்று ஆளுநர் கருதுகிறாரோ, அவரை அவர் ஆட்சி அமைக்க அழைக்கலாம். இதனால் தொங்கு சட்டசபை அமையும்போது ஆளுநரின் பங்கு முக்கியமானதாக மாறும்! ஆளுநர் யாரை அழைத்தாலும், அவர் குறிப்பிட்ட காலத்திற்குள் பொதுவாக 15 நாட்களில் சட்டசபையில் ‘நம்பிக்கை வாக்கெடுப்பு’ மூலம் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஒருவேளை ஆளுநர் ஒருதலைபட்சமாகச் செயல்படுவதாக அரசியல் கட்சிகள் கருதினால் அவர்கள் நீதிமன்றத்தில் முறையிடலாம்!
