தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க விரும்பினார் விஜய். ஆனால், தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்பே பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. இணைந்தது. அதன் பிறகுதான் அ.தி.மு.க.வை கடுமையாக விமர்சித்தார் விஜய்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட த.வெ.க. பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தேர்தலுக்கு பிந்தையை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்தான் த.வெ.க.வுடன் அ.தி.மு.க. ரகசியப் பேச்சு வார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

த.வெ.க.வில் உள்ள மூத்த நிர்வாகிகள் சிலர் விஜய்யிடம் பேசியபோது, ‘‘தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளில் இருந்து வரும் தகவல்கள் மகிழ்ச்சியளிக்கிறது. நம்முடைய விசில் சின்னத்திற்கு ஒன்றரை கோடிக்கு மேற்பட்ட வாக்குகள் கிடைத்திருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வருகின்றன. 140க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தவெக வெற்றி பெறும் நிலை உருவாகியுள்ளது. ஆட்சியமைப்பது பற்றி நாம் ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டிய நேரம் இது என்று கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு உற்சாகமான விஜய், ’என் காதிற்கு வரும் தகவல்களும் அப்படித்தான் இருக்கின்றன. ஆனால் தேர்தல் முடிவுகள் வரும் வரை கட்சி தரப்பில் நாம் அமைதியாக இருக்க வேண்டும். மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் சரியாக எண்ணுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்’’ என்றனர்.

இந்த நிலையில்தான் விஜய்க்கு நெருக்கமான ஒருவரிடம் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான ஒருவர் சந்தித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதாவது, தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு முடிந்து மே 4ம் தேதி முடிவுகளுக்காக ஒட்டுமொத்த மாநிலமும் காத்திருக்கும் நிலையில், கோட்டையை கைப்பற்றப் போவது யார் என்பதில் அதிமுக மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இடையே ரகசியப் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இந்த முறை 4 முனைப் போட்டி நிலவுகிறது. வாக்குப்பதிவு சதவீதமும் 85 சதவீதத்தைத் தாண்டியுள்ள நிலையில், எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்குமா என்பதில் அரசியல் நோக்கர்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது. இந்தச் சூழலில்தான், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோரின் பிரதிநிதிகள் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

நம்பத்தகுந்த வட்டாரங்களின்படி, சென்னையின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. இதில் தவெக தரப்பில் மிக முக்கியமான இரு ‘பெரிய தலைகளும்’ அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமான ஒரு முக்கியப் புள்ளியும் கலந்துகொண்டதாகத் தெரிகிறது. இந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கம், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமையும் ஆட்சி குறித்த “பிளான் பி” என்று சொல்லப்படுகிறது.

ஒருவேளை அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை விடச் சில இடங்கள் குறைவாகப் பெற்றால், தவெக-வின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. தவெக தரப்பிலிருந்து ‘துணை முதலமைச்சர்’ பதவி அல்லது மிக முக்கியமான துறைகள் கேட்கப்பட்டிருக்கலாம்’’ என்றனர்.

நாலா பக்கமும் இருந்தும் வரும் செய்திகளுக்கு மே 4ம் தேதி பெட்டியை திறந்தால் விடை கிடைத்துவிடும். அதுவரை பல்வேறு செய்திகள் பரவத்தான் செய்யும் என்பதிலும் ஆச்சர்யமில்லை!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal