கிரிக்கெட் உலகில் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்து வருகிறார்.
ஐபிஎல் போட்டிகளில் பலரையும் வியக்க வைக்கும் புதிய வரலாற்றை உருவாக்கி வருகிறார். அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி வருகிறது. அந்த வகையில், தற்போது அவர் உலக கிரிக்கெட் வரலாற்றில் முதல் பேட்ஸ்மேனாக படைத்திருக்கும் சாதனை என்ன என்பது குறித்து பார்ப்போம்.

ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ஜெய்ப்பூரில் நடைபெற்ற 36வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 3-வது பந்திலிருந்து தொடர்ந்து 4 சிக்சர்கள் விளாசி தொடக்கத்திலேயே அதிர வைத்தார் சூர்யவன்ஷி.
6 பந்துகளில் 30 ரன்களை எடுத்து மிரட்டினார். சிக்ஸ், ஃபோர் மட்டுமே விளாசியவர், 15 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். டி20 கிரிக்கெட் வரலாற்றில் 15 பந்துகளில் அரைசதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனை படைத்தார் சூர்யவன்ஷி. குறிப்பாக டி20 வரலாற்றில் 15 வயதில் 1000 ரன்களை கடந்தவர் என்ற புதிய சரித்திரத்தை உருவாக்கினார் சூர்யவன்ஷி.
வைபவ் சூர்யவன்ஷியின் அபார சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் குவித்தது ராஜஸ்தான். தொடர்ந்து விளையாடிய ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டி ராஜஸ்தான் அணிக்கு அதிர்ச்சி அளித்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 74 ரன்கள் விளாசினார். இதனால் வைபவ் சூர்யவன்ஷியின் சதம் வீணானது.
சூர்யவன்ஷியின் உலக சாதனை – கடந்த ஆண்டு குஜராத் டைட்டான்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி சார்பில் விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, 35 பந்துகளில் சதம் விளாசி அதிரடி காட்டினார். தற்போது ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 36 பந்துகளில் சதம் விளாசியிருந்தார். இந்நிலையில் 40 பந்துகளுக்கு உள்ளாகவே 2 முறை சதம் விளாசிய உலகின் ஒரு கிரிக்கெட் வீரர் என்ற புது வரலாற்றை உருவாக்கியிருக்கிறார் சூர்யவன்ஷி.
