த.வெ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்றைய தினம் (29ம் தேதி) அறிவித்தார் அக்கட்சியின் தலைவர் விஜய்!

த.வெ.க.வில் 234 தொகுதிகளிலும் போட்டியிட வேட்பாளர்கள் இருக்கிறார்களா? என்ற கேள்வியை எழுப்பினார்கள் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். ஆனால், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து அக்கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் விஜய். அதோடு, தேர்தல் களத்தில் பல தொகுதிகளில் த.வெ.க. வேட்பாளர்கள் வெற்றிக் கோட்டை நெருங்குவதோடு, தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்பதுதான் கூடுதல் தகவலாக இருக்கிறது.

2026 சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் காணும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். திமுகவின் இரண்டு வலுவான தொகுதிகளில் விஜய் போட்டியிடுவதன் மூலம் அத்தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு தொகுதிகளிலுமே விஜய் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

அதே போல், 2026 தேர்தல் களத்தில் சில வேட்பாளர்கள் வெற்றிக் கோட்டை நெருங்குவதோடு, கடுமையான தாக்கத்தையும் ஏற்படுத்துவார்கள். அவர்கள் யாரென்று பார்ப்போம்.

1, கோபிசெட்டிப் பாளையத்தில் போட்டியிடும் கே.ஏ.செங்கோட்டையன் நீண்ட, நெடிய அரசியல் அனுபவம் கொண்டவர். அரை நூற்றாண்டு காலம் மக்கள் பிரதிநிதியாக இருந்த இவர், கோபி தொகுதியில் வெற்றிக்கோட்டை தொட வாய்ப்பிருப்பதோடு, திராவிடக் கட்சிகளுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவார்.

2, ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் ஜே.சி.டி.பிரபாகர் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். அணியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இவரும் ஆயிரம் விளக்கு தொகுதியில் சிம்ம சொப்பனமாக இருப்பார்.

3, திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் போட்டியிடுபவர் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன். இவர் 1991 முதல் 1996 வரையிலான அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயத்துறை அமைச்சர், ஸ்ரீரங்கம், ஆலங்குடி உள்ளிட்ட தொகுதிகளில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர். அரசியல் அனுபவம் நிறைந்த கு.ப.கி. லால்குடி தொகுதியில் வெற்றிக்கோட்டை தொட வாய்ப்பிருக்கிறது. காரணம், தி.மு.க., அ.தி.மு.க.வில் களமிறங்கியிருப்பவர்கள் ‘திடீர்’ வேட்பாளர்கள்!

4, தி.நகர் தொகுதியில் த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் போட்டியிடுகிறார். விஜய்யின் வலதுகரமான புஸ்ஸி ஆனந்தும் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு சவாலைக் கொடுப்பார் என்கிறார்கள்.

  1. வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா போட்டியிடுகிறார். பண பலம் படைத்த இவரை எதிர்ப்பதற்காகவே தி.மு.க. சார்பில் அண்ணா நகர் எம்.எல்.ஏ. மோகனின் மகனும், சபரீசனின் நெருங்கிய நண்பருமான கார்த்திக் மோகன் களத்தில் இறங்கியிருக்கிறார். எனவே, வில்லிவாக்கத்தில் தி.மு.க., த.வெ.க. இடையேதான் கடுமையான போட்டி இருக்கும்!

6, எழும்பூர் தனி தொகுதியில் ராஜ்மோகன் போட்டியிடுகிறார். விஜய்க்கு நெருக்கமான ராஜ்மோகன், தி.மு.க. சார்பில் போட்டியிடும் தமிழன் பிரசன்னாவுக்கும் இடையே கடும் போட்டியிருக்கும் என்பதோடு, அத்தொகுதியில் தாக்கத்தையும் ஏற்படுத்துவார்.

7, திருச்செங்கோடு தொகுதியில் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண்ராஜ் போட்டியிடுகிறார். இவர் வேட்பாளராக களமிறங்குவதற்கு முன்பே தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த பரிசுப் பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் அள்ளிச் சென்றனர். எனவே, இவரும் திராவிடக் கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார்.

8, மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் சி.டி.ஆர்.நிர்மல் குமார் போட்டியிடுகிறார். ஏற்கனவே, பா.ஜ.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளில் இருந்து ஓரளவு அரசியல் அனுபவம் உள்ளவர். இவரும் திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க.விற்கு சாவாலைக் கொடுப்பார்.

  1. தூத்துக்குடி தொகுதியில் தவெக தலைவர் விஜயின் நண்பர், நடிகர் ஸ்ரீநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளர்களை அறிவிவிக்கும் நிகழ்வில் ஸ்ரீநாத்தை நண்பர் என்று அன்போடு அழைத்து விஜய் அறிமுகம் செய்தார். வேட்டைக்காரன் படத்தில் விஜயுடன் இணைந்து ஸ்ரீநாத் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத் களமிறங்கியிருப்பதுதான், தூத்துக்குடி மீனவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க.விற்கு ஸ்ரீநாத்தும் கடும் சாவாலைக் கொடுப்பார்.
  2. திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் த.வெ.க. சார்பில் நவல்பட்டு விஜி போட்டியிடுகிறார். சமீபத்தில் த.வெ.க.வில் இணைந்து போட்டியிடும் வாய்ப்பை பெற்றார் நவல்பட்டு விஜி! ‘பழைய கணக்கு’ ஒன்றை தீர்ப்பதற்காக களத்தில் இறங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். அதாவது, திருவெறும்பூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் போட்டியிடுகிறார். இதற்கு முன்பு தி.மு.க.வில் இருந்த நவல்பட்டு விஜி கே.என்.நேருவின் தீவிர விசுவாசி… அதே சமயம் அன்பில் மகேஷுக்கு எதிராக செயல்பட்டதால்தான் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். எனவே, திருவெறும்பூர் மக்களிடம் நன்கு அறிமுகமான நவல்பட்டு விஜி களத்தில் இறங்கியிருப்பது, அ.தி.மு.க.விற்கு தொகுதியை சாதகமாக மாற்ற வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal