தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் பாஜகவுக்கு மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகை, அவிநாசி, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர், ராதாபுரம், நாகர்கோவில், விளவங்கோடு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, ராசிபுரம், ராமநாதபுரம், பத்மநாபபுரம், மானாமதுரை, குளச்சல் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இம்முறை கோவை வடக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மதுரையில் வடக்கு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. இம்முறை மதுரை தெற்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிட்ட நெல்லை தொகுதி இம்முறை ஒதுக்கப்படவில்லை. இதனால் சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது.
அதேபோல் அண்ணாமலை கடந்த முறை போட்டியிட்ட அரவக்குறிச்சி தொகுதியும் இம்முறை ஒதுக்கப்படவில்லை. சென்னையிலும் துறைமுகம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட தொகுதிகளை அதிமுக கொடுக்கவில்லை. இதனால் அண்ணாமலை சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 2026 சட்டசபைத் தேர்தலில் 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே பாமகவுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது என்பது குறித்த விவரத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி தர்மபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், திருப்போரூர் தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது. மேலும், ஜெயங்கொண்டம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோவில், சேலம் வடக்கு, உத்திரமேரூர் தொகுதிகளிலும் பாமக போட்டியிடுகிறது. இது தவிர போரூர், செஞ்சி, விருத்தாசலம், பெரம்பூர், கீழ்வேளூர், மயிலாடுதுறை, அம்பத்தூர், சேலம் மேற்கு என மொத்தம் 18 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது.
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட உள்ள 11 தொகுதிகளின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பெரியகுளம், மன்னார்குடி, திருவையாறு, காரைக்குடி, திருப்பத்தூர், நாங்குநேரி, ஒட்டப்பிடாரம், திருச்சிமேற்கு, சைதாப்பேட்டை, பூந்தமல்லி, மடத்துக்குளம் உள்ளிட்ட 11 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.
