தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வலுவாக கட்டமைத்துவிட்டார் மு.க.ஸ்டாலின். ஆனால், தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதாக அறிவாலயத்தில் இருந்து தகவல்கள் வருகிறது.

இது பற்றி அறிவாலயம் வட்டாரத்தில் பேசினோம். தமிழகத்தில் காங்கிரஸ் பாணியில் விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, மக்கள் நீதிமய்யம், 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக என திமுக கூட்டணியில் உள்ள 6 கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தி உள்ளன. தொகுதி பங்கீட்டில் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையீடு செய்ய வேண்டும் என்று கூறி வருவதால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவி வருவதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும். இதனால் திமுக, அதிமுக கூட்டணிகள் தங்களின் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்வது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. குறிப்பாக திமுக கூட்டணியை எடுத்து கொண்டால் மிகவும் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறது.

நீண்ட மோதல், இழுபறிக்கு பிறகு திமுக தனது கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை உறுதி செய்துள்ளது. இந்த கூட்டணி உடைந்துவிடும் நிலைக்கு சென்ற நிலையில் முதல்வர் ஸ்டாலின் இழுத்து பிடித்து தக்கவைத்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை 25 சட்டசபை தொகுதிகள் வழங்கப்பட்டது. இந்த முறை 28 சட்டசபை தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மீண்டும் காங்கிரஸ் கட்சியை திமுக தனது கூட்டணியில் தக்க வைத்துள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிவடைந்துள்ள நிலையில் பிற கட்சிகளுடன் சிக்கல் நிலவி வருகிறது. இதனால் வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான திமுக உடனான தொகுதி பங்கீட்டில் தாமதம் நீடிக்கிறது. கூட்டணிக் கட்சிகள், முதலமைச்சரும் திமுக தலைவருமான முக ஸ்டாலினை நேரடியாக தலையீட்டு தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய வேண்டும் என்று கூறி காங்கிரஸ் கட்சியின் பாணியில் இறங்கி உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியுடன் திமுகவின் தொகுதி பங்கீட்டு குழு பேசவில்லை. நேரடியாக முதல்வர் ஸ்டாலினும், காங்கிரஸ் தலைவர்களுடன் பேசியே தொகுதி பங்கீட்டை முடித்தனர். அதேபோல் முக ஸ்டாலின் தங்களுடன் பேசி தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய வேண்டும் என்று பிற கூட்டணி கட்சியினர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். ஏனென்றால் தற்போது திமுக சார்பில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினருடன் கடுமையாக பேரம் பேச வேண்டி உள்ளது.

இதனால் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள், 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், வைகோவின் மதிமுக, பிரேமலதா விஜயகாந்தின் தேமுதிக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தொகுதி பங்கீட்டு குழுவில் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தாலும் கூட இன்னும் தொகுதிகள் இறுதி செய்யப்படவில்லை. இந்த கட்சிகள் அனைத்தும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்கின்றன. ஆனால் தொகுதி பங்கீட்டு குழுவினர் ஒற்றை இலக்கத்தில் தொகுதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பேசி வருகின்றனர்.

அதன்படி 2 கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 5 தொகுதிகள், தேமுதிகவுக்கு 8, விசிகவுக்கு 7 தொகுதிகளை திமுக முன்மொழிந்துள்ளது. இதனை அந்த கட்சிகள் ஏற்க மறுக்கின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கடந்த முறை தலா 6 தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில் இந்த முறை தலா ஒன்று குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் ஏற்க மறுக்கின்றன. அதேபோல் நீண்டகாலமாக திமுக கூட்டணியில் உள்ள விசிகவுக்கு 7 தொகுதியும், புதிதாக வந்த தேமுதிகவுக்கு 8 தொகுதியும் வழங்கப்படுவதால் திருமாவளவன் தரப்பு அதிருப்தியாகி உள்ளது.

தேமுதிகவை எடுத்து கொண்டால் அதற்கு மாநில கட்சி அந்தஸ்து இல்லை. முரசு சின்னத்தை இழந்துள்ளது. இதனால் அந்த கட்சியின் சில வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் களமிறங்க திமுக பணிப்பதாக கூறப்படுகிறது. இதனை ஏற்க தேமுதிக மறுப்பதாக சொல்லப்படுகிறது.

அதேபோல் மதிமுக, மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கு தலா 3 தொகுதிகளை வழங்குவதாகவும், ஆனால் அந்த தொகுதிகளில் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் களமிறங்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மதிமுக, மக்கள் நீதி மய்யம் தயங்குகின்றன. இதனால் இந்த கட்சிகளுடன் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறியாக உள்ளது. இதனால் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட வேண்டும் என்று அந்த கட்சியினர் விரும்புகின்றனர். இருப்பினும் கூட திருச்சியில் திமுக சார்பில் நாளை மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை தொடர்ந்து அனைத்து கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக முடிய வாய்ப்பிருக்கிறது’’ என்றனர்.

ஆக மொத்தத்தில் ‘பில்டிங் ஸ்ட்ராங்… பேஸ்மட்டம் வீக்’ என்ற வடிவேலுவின் காமெடிதான் ஞாபகத்திற்கு வருகிறது. காரணம், வலுவான கூட்டணி அமைந்தும், தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பதால், எப்படி ஒற்றுமையுடன் தேர்தல் களத்தில் வேலை பார்ப்பார்கள் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal