தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. முதன்முறையாக இணைந்து, அ.தி.மு.க.விற்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக, எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை அக்கட்சி தலைமை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது அரசியல் வட்டாரங்களில் விவாதங்களை எழுப்பிய நிலையில், திமுகவுடனான கூட்டணியை தேமுதிக இன்று உறுதி செய்துள்ளது.

தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னை, திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்ரவரி 19) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அவருடன் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷும் முதலமைச்சரை சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ‘‘முதல்முறையாக தேமுதிக திமுகவுடன் கூட்டணி அமைத்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளது. இன்று முதலமைச்சரை சந்தித்து கூட்டணியை உறுதி செய்துள்ளோம். இதன் மூலம் கூட்டணி குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விடை அளித்துவிட்டோம். இந்தக் கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும்’’ எனக் கூறினார்.

‘‘இந்தக் கூட்டணி 2016இல் அமைந்திருக்க வேண்டியது. பழம் நழுவி பாலில் விழும் என கருணாநிதி அப்போது கூறியிருந்தார், அது இப்போது நிகழ்ந்திருக்கிறது’’ என அவர் கூறினார்.

தேமுதிக நிர்வாகிகளும் திமுக கூட்டணியை விரும்புகிறார்கள் என்று குறிப்பிட்ட பிரேமலதா விஜயகாந்த், ‘‘இந்தக் கூட்டணியில் தேமுதிக எத்தனை இடத்தில், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பது, ஒரு குழு அமைக்கப்பட்டு, அது இரண்டு கட்சிகளுடனும் கலந்தாலோசித்த பிறகு, முடிவை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பார்’’ என்றும் கூறினார்.

திமுக- & தேமுதிக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், கருணாநிதி மீது மாறாத அன்பு கொண்டவர் என விஜயகாந்த்தை குறிப்பிட்டுள்ளார். ‘‘எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது’’ எனப் பதிவிட்டுள்ளார்.

தேமுதிகவை “தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன். கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு – நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்” என தனது பதிவில் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal