தமிழ்நாட்டில் விரைவில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான ராஜ்யசபா தேர்தல் வரும் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சட்டசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள சூழலில் அதற்கு முன்பாக ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. 6 தமிழ்நாடு உறுப்பினர்கள் உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ள 37 இடங்கள் காலியாகின்றன. இந்த 37 இடங்களுக்கான எம்.பிக்களை தேர்வு செய்ய மாநிலங்களவை தேர்தல் வரும் மார்ச் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 26 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 5. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை – மார்ச் 6 ஆம் தேதி. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 9. போட்டி இருந்தால் வாக்குப் பதிவு நடைபெறும் நாள் மார்ச் 16. அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. திமுகவின் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி என்விஎன் சோமு, அதிமுகவின் தம்பிதுரை, தமாகா தலைவர் ஜிகே வாசன் ஆகியோரது பதவிக் காலம் முடிவடைகிறது.

இதனையடுத்து தமிழகத்தின் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்கள் உட்பட 10 மாநிலங்களின் 37 எம்.பி இடங்களுக்கு மார்ச் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது தமிழ்நாட்டில் கட்சிகளுக்கு உள்ள எம்.எல்.ஏக்களின் அடிப்படையில் திமுக 4 எம்.பிக்களையும், அதிமுக 2 எம்.பிக்களையும் தேர்வு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு அதிகமாக வேட்பாளர்கள் நிற்கும் பட்சத்தில் தேர்தல் நடைபெறும்.

சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணியை பேசும் கட்சிகள் தரப்பில் சிலர் ராஜ்ய சபா எம்பியை கேட்கக் கூடும். ஏற்கனவே மதிமுக தரப்பில் வைகோவுக்கு ராஜ்ய சபா கொடுக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. அதேபோல் விசிகவுக்கு குறைவான தொகுதிகளை திமுக ஒதுக்கும் பட்சத்தில், அவர்களும் ராஜ்ய சபா எம்பிக்கு சில அழுத்தம் கொடுக்கலாம். இதனிடையே திமுக தரப்பில் பல்வேறு வழக்குகளை நடத்தி வரும் என்ஆர் இளங்கோவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. அதேபோல் ராஜ்ய சபாவில் சீனியரான திருச்சி சிவாவிற்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படலாம்.

இதனால் மீதமுள்ள 2 ராஜ்ய சபா சீட்கள் யார் யாருக்கு ஒதுக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்தியூர் செல்வராஜ் மற்றும் கனிமொழி சோமு ஆகியோரின் இடங்களுக்கு புதியவர்கள் கொண்டு வரப்படலாம் என்று தெரிகிறது. கனிமொழி சோமுவுக்கு பதிலாக வேறொரு பெண் முகத்தை திமுக ராஜ்ய சபாவுக்கு அனுப்பக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவை பொறுத்தவரை ஏற்கனவே பாமகவுக்கு ஒரு சீட் கொடுப்பதாக ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. இதனால் அன்புமணிக்கு தேர்தலுக்கு முன்பே கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் உறுதி கொடுக்கப்பட்டதால், அது பிரேமலதாவுகோ அல்லது சுதீஷுக்கோ கொடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராஜ்ய சபாவின் 2 இடங்களும் அதிமுகவினருக்கு இல்லையென்றால், அது மிகப்பெரிய ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் கட்சிக்குள் ஏற்படுத்தும். இதனால் எடப்பாடி பழனிசாமி என்ன முடிவை எடுக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பாமக, தேமுதிக ஆகிய இரு கட்சிகளுமே ராஜ்ய சபா சீட்டை தீவிரமாக எதிர்பார்த்திருக்கின்றனர். தி.மு.க.விலும் வைகோ எதர்பார்த்துக் காத்திருக்கிறார்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal