மதுரை திருப்பரங்குன்றத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ஆட்சி, அதிகாரத்தில் பங்குவேண்டும் என்பது உள்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தி.மு.க.விடம் ‘ஆட்சியில் பங்குவேண்டும்’ என காங்கிரஸ் நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், ‘கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என்று தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசினார். இதன் பிறகு ‘ஆட்சியில் பங்கு’ கோரிக்கை எழாது என்று எதிர்பார்த்தனர்.

இந்த நிலையில்தான், மதுரை, திருப்பரங்குன்றத்தில் மாணிக்கம் தாகூர் தலைமையிலான காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு, காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகள் வேண்டும் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
‘ஆட்சியில் பங்கு’ கோரிக்கை வலுத்து வருவதால், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
