இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்றத் தொகுதியை பா.ஜ.க.விற்கு தள்ளிவிடப் பார்க்கிறார் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் என ரத்தத்தின் ரத்தங்கள் குமுறுகின்றனர்.

பரமக்குடி சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் இதுவரை 8 முறை அ.தி.மு.க வென்றிருக்கிறது. தவிர, 4 முறை திமுகவும், ஒருமுறை த.மா.க.வும், ஒருமுறை காங்கிரசும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த நிலையில்தான் இந்தமுறை 2026ல் பரமக்குடி தொகுதியை பா.ஜ.க.விற்கு தள்ளிவிடப் பார்க்கிறார் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் முனியசாமி என்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

இது பற்றி பரமக்குடி ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம். ‘‘சார், பரமக்குடி தொகுதியைப் பொறுத்தளவில் அ.தி.மு.க.வின் கோட்டை என்றே சொல்லலாம். அதிக முறை அ.தி.மு.க. இந்தத் தொகுதியில் வென்றிருக்கிறது. இந்த முறை பா.ஜ.க.விற்கு ஒதுக்க மாவட்டச் செயலாளர் முயற்சிக்கிறார்.

காரணம், பரமக்குடி தொகுதியில்தான் மாவட்டச் செயலாளர் முனியசாமி வசித்து வருகிறார். இவரது மனைவி கீர்த்திகா முனியசாமி முன்பு சேர்மனாக இருந்தார். எனவே, பரமக்குடி தொகுதியில் தன்னைத் தவிர வேறு யாரும் ‘பவர்’ சென்ட்ராக வந்துவிடக்கூடாது என நினைக்கிறார். இதற்காக பரமரக்குடி தொகுதியை பா.ஜ.க.விற்கு தாரைவார்க்கத் துடிக்கிறார்.

இந்த நிலையில்தான், பா.ஜ.க.வின் முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணனை வைத்து செயல்வீரர்கள் கூட்டத்தையும் நடத்தி முடித்திருக்கிறார். இந்தக் கூட்டம் நடந்தது கூட இவரது திருமண மண்டபத்தில்தான்.

எனவே, பரமக்குடி தொகுதி அ.தி.மு.க.வை விட்டுப் போய்விடக் கூடாது என்பதே எங்களது விருப்பம். எனவே, தலைமையும் யோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal