‘தேர்தல் முடிவுக்கு பிறகு, தீயசக்தி, ஊழல்வாத அடிமை சக்திகளிடம் இருந்து தமிழகத்தை மீட்டுவிட்டோம்’ என உறுதியாக அறிவிப்போம் என்று தவெக தலைவர் விஜய் ஆவேசமாக பேசினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில, மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் விஜய் பேசியதாவது: ‘‘நமது இந்த அரசியல் பயணத்தில் மிக முக்கியமான காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். நான் ஏன் இதை இவ்வளவு அழுத்தமாக சொல்கிறேன் என்றால், ஏதோ அழுத்தம் இருக்குமோ என நீங்கள் நினைக்கலாம். அழுத்தத்துக்கு எல்லாம் அடங்கி போகிறவனா நான்.

இந்த முகத்தை பார்த்தால் அப்படியா தெரிகிறது. நம்மகிட்ட அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. அழுத்தம் இருக்கிறதா என கேட்டால், நிச்சயம் இருக்கிறது. அழுத்தம் நமக்கில்லை, மக்களுக்கு தான். தமிழகத்தை இதற்கு முன் ஆண்டவர்கள் பாஜக-வுக்கு நேரடியாக ‘சரண்டர்’ ஆனார்கள். இப்போது ஆண்டு கொண்டிருப்பவர்கள் மறைமுகமாகச் ‘சரண்டர்’ ஆகியிருக்கிறார்கள்.

அவ்வளவுதான் வித்தியாசம். தங்கள் வேஷம் கலைந்துவிடக் கூடாது என்பதற்காக, கவர்ச்சிகரமான அறிவிப்புகளைக் கலர் கலராக வெளியிடுகிறார்கள். மாறி மாறி ஓட்டுப் போட்டு ஏமாந்துவிட்ட மக்கள், ஒரு பெரும் அழுத்தத்தில் இருக்கிறார்கள். நமக்காக உழைக்க ஒருவன் வரமாட்டானா? என ஏங்கும் அந்த மக்கள் இப்போது நம்மை நம்புகிறார்கள்.

மக்கள் என்னைச் சரியாக மதிப்பிட்டு, என் கேரியரின் உச்சத்தில் ஒரு இடத்தை எனக்காகக் கொடுத்திருக்கிறார்கள். அந்த அன்பும் உழைப்பும் இப்போது என் ‘ஒரிஜினல் கேரக்டராகவே’ மாறிவிட்டது. ஆட்சி அதிகாரத்துக்கு வந்தபிறகு, இதற்கு முன் இருந்தவர்களைப் போலவோ அல்லது இப்போது இருப்பவர்களைப் போலவோ ஒரு பைசா கூட ஊழல் செய்ய மாட்டேன். என் மீது ஒரு துளி ஊழல் கரை படியவும் விடமாட்டேன். ஊழல் சக்தி, தீய சக்தி இந்த இருவரும் தமிழகத்தை ஆளவே கூடாது.

எத்தனை அழுத்தங்கள் கொடுத்தாலும், என்னதான் சூழ்ச்சிகள் செய்தாலும் சரி, யாருக்கும் அடங்கிப்போகவோ, அண்டிப் பிழைக்கவோ, அடிமையாகக் கிடக்கவோ நான் அரசியலுக்கு வரவில்லை. ஆண்ட கட்சி, ஆளும் கட்சிக்கு ‘பூத்’ என்பது கள்ள ஓட்டு போடும் இடம். ஆனால் தமிழக வெற்றிக் கழகத்துக்கு அது ஜனநாயகக் கூடம். அங்கு ஜனநாயகம் திருடு போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இது வெறும் தேர்தல் கிடையாது. ஜனநாயக போர். தீயசக்தியின் (திமுக) தில்லுமுல்லு உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். முழித்து கொண்டிருக்கும் போதே, நம் முழியை தோண்டி எடுத்து சென்றுவிடுவார்கள்.

எனவே, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான வீரமங்கை வேலு நாச்சியார் நட்பு சக்திகளை திரட்டி பெரும் படையை உருவாக்கி ஆங்கிலேயேப் படை, ஆற்காடு படைகளை துவம்சம் செய்து தான் இழந்த சொந்த நாட்டை மீட்டார். இந்த தவெக படை நட்பு சக்தி இருந்தாலும், இல்லை என்றாலும், தனியாக நின்று வெற்றி பெறும் மிகப்பெரிய படை. தேர்தல் முடிவுக்கு பிறகு, தீயசக்தி, ஊழல்வாத அடிமை சக்திகளிடம் இருந்து தமிழகத்தை மீட்டுவிட்டோம் என உறுதியாக அறிவிப்போம்’’ இவ்வாறு அவர் பேசினார்.

த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய் பேச்சின் பின்னணி குறித்து பார்ப்போம்… தி.மு.க.வையும், பா.ஜ.க.வையும் கடுமையாக விமர்சித்து வந்த விஜய், செயல்வீரர்கள் கூட்டத்தில் ‘ஊழல் அடிமை சக்தி’ என அ.தி.மு.க.வை கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு காரணம், பா.ஜ.க.வை நேரடியாக விமர்சிக்காமல், அதற்கு பதிலாக என்.டி.ஏ. கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க.வை விமர்சித்திருக்கிறார்.

அதாவது, மதுராந்தகத்தில் நடந்த கூட்டத்தில், தி.மு.க.வை ஊழல் கட்சி என கடுமையாக விமர்சித்தார் மோடி! ‘நீங்கள் மட்டும் என்ன-? ஊழல் கட்சி அ.தி.மு.க.வோடுதான் கூட்டணி வைத்திருக்கிறீர்கள்’ என்பதை உணர்த்தும் விதமாக விஜய் பேசியிருக்கிறார்.

அடுத்தது, விசாரணை அமைப்புகள் மூலம் விஜய்க்கு ‘மேலிடம்’ அழுத்தம் கொடுத்ததாக தகவல்கள் வந்தது. அதுவும் உண்மை என்பது விஜய் பேச்சில் தெளிவானது. அதாவது, ‘அழுத்தம் கொடுத்தார்கள் என்பது உண்மைதான். ஆனால், அழுத்தம் எனக்கில்லை. தமிழக மக்களுக்குத்தான்’ என பேசினார் விஜய். தனக்கு கொடுத்த அழுத்தத்தை மக்களுக்கு கொடுத்ததாக சொல்லியிருக்கிறார்.

மேலும், விஜய் சொன்ன குட்டிக்கதையின் மூலம் ‘மேலிடம்’ எந்தளவிற்கு விஜய்க்கு அழுத்தம் கொடுத்திருக்கிறது என்பது புரிகிறது. ‘வேலுநாச்சியாருக்கு சொந்த நாட்டை விட்டே போகும் அளவிற்கு அழுத்தம் இருந்தது. ஆனால், அவர் தனது நண்பர்கள் மூலமாக தன்னை விரட்டியடிக்க முயற்சித்தவர்களை அவர் (ஆங்கிலேயர்கள்) விரட்டியடித்தார்’ என்றார்.

அதாவது, விஜய்யின் அரசியல் வருகை என்பது தமிழகத்தில் எப்படியாவது கலூண்றி விடலாம் என்ற பா.ஜ.க.வின் கனவில் மண்ணை வாரிப்போட்டது. இந்த நிலையில்தான் டெல்லி சென்ற விஜய்க்கு, அரசியலைவிட்டே ஓதுங்கியிருக்குமாறு கொடுத்த அழுத்தத்தைத்தான், அவர் வேலுநாச்சியாரை உதாரணமாக வைத்து குட்டிக் கதையை சொல்லியிருக்கிறார். இந்தப் பின்னணியில்தான் அ.தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்தார் விஜய்!

இப்போது புரிகிறதா, ‘ஊழல் அடிமை கட்சி’ என விஜய் கர்ஜித்ததன் பின்னணி..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal