த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய் வாடிய முகத்துடன் பங்கேற்றதுதான் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

கரூர் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணை, ஜனநாயகன் சென்சார் பிரச்சனை நீடித்து வரும் நிலையில் த.வெ.க. செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் செயல் வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டலில் நடைபெறுகிறது. செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக த.வெ.க. நிர்வாகிகள் இன்று காலையிலேயே மாமல்லபுரம் ஓட்டலுக்கு வரத் தொடங்கினார்கள்.

கூட்டத்தில் பங்கேற்பதற்காக த.வெ.க. தலைவர் விஜய் காலை 9.30 மணியளவில் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார். இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் செயல் வீரர்கள் கூட்டம் தொடங்கியது. மேடையில் விஜய் கொள்கை தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் த.வெ.க. கொள்கை பாடல் இசைக்கப்பட்டது. த.வெ.க. நிர்வாகிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் என்பதால், மேடையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதலில் பேசிய கே.ஏ.செங்கோட்டையன், ‘‘கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்திற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து ஆட்களை கூட்டி வந்தார்கள். வந்தவர்கள் அசதியில் தூங்கியதை பார்க்க முடிந்தது. ஆனால், காசே கொடுக்காமல் த.வெ.க.விற்கு மட்டும்தான் கூட்டம் கூடுகிறது. இதனை நான் வியந்துபோய் பார்க்கிறேன். தமிழகத்தில் எந்தவொரு அரசியல் கட்சியையும் எதிர்த்து தவிடுபொடியாக்கும் வல்லமை த.வெ.க.விற்கு மட்டும்தான் உண்டு’’ என்றார்.

அடுத்தடுத்த தலைவர்கள் பேசத் தொடங்கினார்கள். ஆனால், கூட்டத்தில் பங்கேற்ற விஜய் ‘வாடிய முகத்துடன்’ இருந்ததுதான் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

மத்திய அரசின் விசாரணை வளையத்தில் சிக்கியிருக்கும் விஜய்க்கு ‘மேலிடம்’ கடும் அழுத்தம் கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில், ஒரு மாதம் கழித்து நடக்கும் செயல்வீரர்கள் கூட்டத்தில் விசில் சத்தங்களுக்கு இடையேயும் விஜய் வாடிய முகத்துடன் காணப்பட்டார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal