வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் டி.டி.வி.தினகரன் போட்டியிடப் போவதில்லை. மாறாக மத்திய அமைச்சர் பதவிக்கான ‘ஆடுபுலி’ ஆட்டம் ஆரம்பமாகியிருக்கிறது என்கிறார்கள்.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என சொல்லப்படுகிறது. இதற்கான அறிவிப்புகள் பிப்ரவரி மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தென் மண்டலங்களில் செல்வாக்குடைய டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் என்பதை ஏற்க மறுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் (பாஜக தலைமையிலான கூட்டணி)இருந்து வெளியேறினார். இதையடுத்து அவரது நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அவரை பாஜக கூட்டணியில் இணைக்கவும் நிறைய முயற்சிகள் நடந்தன. இந்த நிலையில் அவர் திடீரென பாஜக கூட்டணியில் இணைவதாக அறிவித்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்த மதுராந்தகம் பொதுக் கூட்டத்தில் தினகரன் பேசுகையில், ‘‘அண்ணன் எடப்பாடி பழனிசாமி’’ என்றார்

மேலும் ‘‘இது அண்ணன் தம்பி சண்டை என்றும் பகையை மறந்து தமிழக மக்களின் நலனுக்காக அதிமுக இருக்கும் பாஜக கூட்டணியில் மனப்பூர்வமாக இணைந்துள்ளேன், எனக்கு எந்த அழுத்தமும் இல்லை’’ என தெரிவித்திருந்தார். தவெகவுக்கு ஆதரவாக ஒவ்வொரு முறையும் தினகரன் பேசிய போதெல்லாம் அவர் அந்த கூட்டணிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது நான் அப்படி சொல்லவே இல்லை என ட்விஸ்ட் கொடுத்துவிட்டார்.

இந்த நிலையில்தான் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என டி.டி.வி.தினகரன் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பின் பின்னணி குறித்து டி.டி.வி.க்கு நெருக்கமான வட்டாரத்தில் பேசினோம். ‘‘சார், டி.டி.வி.தினகரனைப் பொறுத்தளவில் தமிழகத்தில் மறைந்த கலைஞருக்குப் பிறகு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு சரளமாகவும், சாதுர்யமாகவும் பதிலளிக்கக்கூடியவர். இன்றைக்கு அந்தத் திறமை மற்ற அரசியல் தலைவர்களுக்கு இருக்கிறதா என்பதே கேள்விக்குறி. இன்றுவரை விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் இருப்தையும் நாம் பார்த்து வருகிறோம்.

எடப்பாடி பழனிசாமியை கடுமையாக எதிர்த்த டி.டி.வி. பின்னர் ‘அண்ணன்’ என்றார். இந்த இணைப்பை அ.ம.மு-.க. தொண்டர்களே ஏற்றுக்கொள்ள தயங்கிய நிலையில், டி.டி.வி. ஏற்றுக்கொண்டதன் பின்னணியில் ‘மாஸ்டர் பிளான்’ இருக்கிறது. அதவாது, தமிழகத்தல் பி.ஜே.பி.யும் வளரவேண்டும் என நினைக்கிறது. அதற்கு டி.டி.வி.தினகரன் போன்ற அறிவு சார்ந்த நிர்வாகிகள் நம் பக்கம் வரவேண்டும் என நினைக்கிறது. இந்தப் பின்னணியில்தால் டி.டி.வி.தினகரனுக்கு ராஜ்யசபா சீட்டை வாங்கிக்கொடுக்க ‘மேலிடம்’ முடிவு செய்திருக்கிறது.

அதாவது, ‘துரோகத்தை’ எல்லாம் ஒரு நொடியில் மறந்துவிட்டு எடப்பாடியுடன் கைகோர்த்த டி.டி.வி.க்கு அ.தி.மு.க.வில் இருந்தே ராஜ்யசபா சீட் கொடுக்க ‘மேலிடம்’ வலியுறுத்தி வருகிறது. ஏற்கனவே, ஜி.கே.வாசனுக்கு அ.தி.மு.க. சார்பில் ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்டது. இதன் பின்னணியிலும் ‘மேலிடம்’ இருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்படி ராஜ்யசபா எம்.பி.யாகும் பட்சத்தில், அ.ம.மு.க.வை பி.ஜே.பியுடன் இணைக்கவும் ‘மேலிடம்’ வலியுத்தி வருகிறதாம். அப்படியொரு ‘இணைப்பு’ நடக்கும் பட்சத்தில், டி.டி.வி. தினகரன் மத்திய அமைச்சராகும் வாய்ப்பியிருக்கிறது’’ என்றனர்.

அரசியல்ல எதுவும் நடக்கலாம்… காத்திருப்போம்..!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal