டி.டி.வி.தினரகனுக்கு தென் மண்டல தளபதியாக விளங்கிய தென் மாவட்டங்களில் அமமுகவின் முகமாக இருந்த துணை பொதுச் செயலாளர் மாணிக்கராஜா, முதல்வர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து திமுகவில் இணைந்தார். அவருடன் எம்.பி., கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் உடனிருந்தனர்.

அமமுக தொடங்கியதிலிருந்தே தினகரனுடன் செயல்பட்டு வருகிறார் மாணிக்கராஜா. இவர் தென் மாவட்டங்களில் அரசியல் செல்வாக்கு கொண்டவர். தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்டவர். கோவில்பட்டியில் ஒருமுறை தினகரன் போட்டியிட்ட போது அவருக்காக கடுமையாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். இவர் கடம்பூர் இளைய ஜமீன்தாராவார். மேலும் கயத்தாறு ஒன்றிய முன்னாள் தலைவராகவும் இருந்து வந்தார்.

இந்த நிலையில் மாணிக்கராஜாவை திடீரென தினகரன் கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் கழக துறைப் பொதுச் செயலாளர் S.V.S.P. lமாணிக்கராஜாவை கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்.கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மாணிக்கராஜா, டி.டி.வி.தினகரன்

டி.டி.வி.தினகரனுக்கு போர்ப்படை தளபதியாகவும், தென்மண்டல தளபதியாகவும் விளங்கிய மாணிக்கராஜா எதற்காக தி.மு.க.வில் இணைந்தால் என்பது தொடர்பாக அ.ம.மு.க.வில் உள்ள நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், மாணிக்க ராஜா இன்று (ஜன.23) காலை திமுகவில் இணைய போவதாக நேற்று இரவு முதலே தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதனால்தான் அவரே போவதற்கு முன்பு தினகரனே அவரை நீக்கியுள்ளார். கிட்டதட்ட எடப்பாடி பழனிசாமி, அன்வர் ராஜாவுக்கு செய்ததை போல்தான். அன்வர் ராஜா அண்ணா அறிவாலயம் சென்ற போது அவசர அவசரமாக முந்திக் கொண்டு கட்சியில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. அதே யுத்தியைத்தான் தினகரனும் பின்பற்றுகிறார். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்வது தற்கொலைக்குச் சமம் என பேசிய தினகரன், திடீரென அந்தர்பல்டியாக என்டிஏ கூட்டணியில் இணைந்ததால் அமமுகவில் சலசலப்பு ஏற்பட்டது.

ஆனால் மாணிக்கராஜாவுக்கு இருந்த அதிருப்தியே வேறு! என்டிஏ கூட்டணியில் அமமுக இணைந்தது கூட வருத்தமில்லை. அமமுகவுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளை கூட தினகரன் கறாராக பேசி வாங்க மறுக்கிறார் என்பதால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் திமுகவில் இணைய முடிவு செய்துவிட்டார். எனவே அவராக அறிவாலயம் சென்று இது ஒரு பெரிய விமர்சனமாகவும் முக்கிய செய்தியாகவும் மாறுவதற்கு முன்பே , தினகரன் அவரை நீக்கி உத்தரவிட்டுவிட்டார். இதுதான் நடந்தது’’ என்றனர்.

மாணிக்கராஜா, இன்று காலை அண்ணா அறிவாலயத்திற்கு சென்றார். அங்கு முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அவருடன் 3 மாவட்டச் செயலாளர்களும் திமுகவில் இணைந்துள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal