தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்மூலம் முதல் தேர்தலிலேயே பொதுச் சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

2026 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த சூழலில் கூட்டணி கணக்குகளை இறுதி செய்ய அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கிடையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விசில் சின்னம் ஒதுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்று அதே சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது பெரிதும் கவனம் பெற்றிருக்கிறது.

இந்த சின்னத்தை மக்களிடம் எளிதில் கொண்டு செல்ல முடியும் என்று தவெகவினர் கூறுகின்றனர். விஜய் பல படங்களில் விசிலை பயன்படுத்தியுள்ளார். எனவே பட்டி, தொட்டியெங்கும் விசில் சின்னத்தை விளம்பரம் செய்ய முடியும். அதுமட்டுமின்றி கடந்த சில மாதங்களாக கரூர் கூட்ட நெரிசல் வழக்குகள், ஜனநாயகன் ரிலீஸ் பிரச்சினை போன்றவற்றால் தவெகவினர் மிகுந்த சோர்வில் இருந்தனர். இத்தகைய சூழலில் விஜய் கேட்டிருந்த விசில் சின்னத்திற்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் அளித்திருப்பதன் மூலம் அக்கட்சியினர் இடையே புதிய உற்சாகம் பிறந்திருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal