முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அமைச்சர்கள் முதல் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வரை யாரும் ‘அட்ராசிட்டி’யில் ஈடுபடக் கூடாது என கடிவாளம் போட்டு, கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்தி வருகிறார்.

இந்த நிலையில்தான், அமைச்சர் கீதாஜீவனின் உதவியாளர் என்று சொல்லிக்கொண்டு தூத்துக்குடியில் ‘மணி’யை வாரிக்குவிக்கும் மணி மீது உடன் பிறப்புக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசுகின்றனர்!

இதுபற்றி தூத்துக்குடியில் உள்ள மூத்த உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘சார், தூத்துக்குடி தி.மு.க.வில் கலைஞரின் முரட்டு பக்தர் என சொல்லப்படும் பெரியசாமி இருந்தபோதே மணி அங்கு கோலோச்சி வந்தார். தற்போது அமைச்சராக இருக்கும் கீதா ஜீவனின் உதவியாளர் என்று சொல்லிக்கொண்டு அரசு அலுவலகத்தில் பணிபுரியும் கீழ்மட்ட அதிகாரிகள் முதல் மேல் மட்ட அதிகாரிகள் வரை மிரட்டி வருகிறார் மணி!

இவரது பேச்சுக்கு உடன்படாத அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்துவிடுகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் விடப்படும் டெண்டர்களை, கட்சி நிர்வாகிகளுக்கு விடாமல், அ.தி.மு.க.வினரிடம் அதிகப்படியான பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு பணிகளை அதிகாரிகள் மூலம் கொடுத்து விடுகிறார். குறிப்பாக இவருக்கு மட்டும் தனியாக 5 சதவீத கமிஷன் கொடுத்தால்தான் பணிகள் கிடைக்கும். இப்படி அதிகப்படியான கமிஷன் கொடுத்தால், பணிகள் எப்படி தரமாக இருக்கும்?

நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை, அனல் மின்நிலையம், துறைமுகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் கடமையை நேர்மையாக செய்யும் அதிகாரிகளை ஒருமையில் பேசுவதும், அதிகார தோரணையில் மிரட்டுவதும் தொடர்கதையாக இருக்கிறது. ஒட்டு மொத்த மக்களும் எதிர்க்கும் ஸ்டெர்லைட்டுக்கும் ஆதரவாக மறைமுகமாக பேசிவருகிறார்.

இவர் அமைச்சருக்கு நேரடி உதவியாளராக செயல்படாமல், மறைமுக உதவியாளராக செயல்பட்டு வருகிறார். அமைச்சரின் பி.ஏ. என்று சொல்லிக்கொண்டுதான் மாவட்ட ஆட்சியர் முதல், கீழ்மட்டத்தில் பணிபுரியும் அதிகாரிகள் வரை பேசி வருகிறார். தூத்துக்குடியில் பணிகள் டெண்டர் விடுவதில், இவருக்கும் மேயருக்கும் கூட அடிக்கடி மோதல் ஏற்படும்.

இப்படி தூத்துக்குடியில் அமைச்சரின் பெயரைச் சொல்லி ‘மணி’யை வாரிக் குவிக்கும் மணியை அமைச்சரும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்’ என்று குமுறினார்கள்.

‘மணி’யின் ஆட்டம் பற்றி உளவுத்துறை முதல்வருக்கு நோட் போட்டிருக்கிறது. விரைவில் மு.க.ஸ்டாலின் சாட்டையை சுழற்றுவார் என்கிறது அறிவாலய வட்டாரத்தில்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal