ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக உனடியாக புறப்பட்டுச் சென்றார் உதயநிதி ஸ்டாலின்!

ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த பயணிகள் 847 பேர் சிக்கி இருப்பதால் அவர்களை மீட்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். விபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

விபத்தில் உயிர் இழந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் விவரம் இன்னும் முழுமையாக தெரிய வரவில்லை. ஆனாலும் தமிழக பயணிகள் அதிகளவில் பயணித்து இருப்பதால் அவர்களை மீட்க ஒடிசா அரசுடன் தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ரெயில் விபத்தில் காயம் அடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு உதவவும் அவர்களை மீட்டு சென்னை அழைத்து வரவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு உதவ அமைச்சர்களும் உடனடியாக செல்ல வேண்டும் என உத்தரவிட்டதை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் புறப்பட்டு சென்றது. இக்குழுவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணீந்தர ரெட்டி, குமார் ஜெயந்த் உள்ளிட்ட 5 அதிகாரிகள் இன்று காலை 9.30 மணிக்கு புறப்பட்டு சென்றனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் புறப்பட்டு சென்ற அதிகாரிகள் குழுவினர் அம்மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து தமிழக பயணிகள் குறித்து விவரங்களை கேட்டறிந்து அவர்களை பற்றி தகவல்களை சேகரித்து உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் தமிழக பயணிகளை பார்த்து ஆறுதல் கூறியதோடு அவர்கள் குடும்பத்திற்கு தேவையான நிவாரண உதவிகளை செய்யவும் அங்கு முகாமிட்டு உள்ளனர்.

தமிழக பயணிகள் குறித்து முழு விவரங்களை பெற்று அவர்கள் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டனர். சென்னை உள்ளிட்ட மற்ற பகுதிகளை சேர்ந்த பயணிகள் எத்தனை பேர் விபத்தில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் உதவிகள் செய்யவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் அங்கு முகாமிட்டுள்ளனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal