அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் எதிர்காலம் குறித்து அவரது மைத்துனர் சபரீசன் மனம் திறந்து பேசியிருக்கிறார்

உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாமன்னன்’. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது. இவ்விழாவில் கமல், சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யா, விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் எதிர்காலத்தில் சினிமாவில் நடிப்பது குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவ்விழாவில் பேசிய நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், ‘‘மாரி செல்வராஜ் படங்களில் என்ன எதிர்பார்க்கபடுமோ, அதெல்லாம் இருக்கிறது. ராஜ் கமல் நிறுவனத்தில் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க திட்டமிட்டோம். ஆனால் அமைச்சராக இருந்து கொண்டு நடிப்பது சரியாக இருக்காது என்பதால் கைவிட்டு விட்டோம். எனக்கு தெரிந்த ‘மாமன்னன்’ படம் தான் என்னுடைய கடைசி படம் என நினைக்கிறேன்.

ஒரு நல்ல படம் கடைசி படமாக அமைந்ததில் மகிழ்ச்சி. அமைச்சராக இருக்கும் அடுத்த முன்று ஆண்டுகளுக்கு எந்த படத்திலும் நடிக்கவில்லை. அதற்கு பின்னர் நான் நடிப்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். அப்படி மீண்டும் நடித்தால் உங்கள் இயக்கத்தில் தான் நடிப்பேன் என மாரி செல்வராஜிடம் வாக்குறுதி அளித்துள்ளேன். ‘மாமன்னன்’ வரும் ஜுன் 29 ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளோம்’’ இவ்வாறு தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

பொதுவாக செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்க்கக் கூடிய சபரீசன் முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்து பேசவும் செய்திருக்கிறார். இதன் மூலம் எதிர்காலத்தில் இவரது நேரடி அரசியல் வருகையும் உறுதி செய்வது போல் தெரிகிறது. இதனிடையே உதயநிதி ஸ்டாலின் இனி சினிமாவில் நடிக்க மாட்டார் என்றும் இன்னும் சொல்லப்போனால் நடிக்க வேண்டாம் எனவும் தனது மைத்துனரை சபரீசன் கேட்டுக்கொண்டார்.

அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார் என்றும் அரசியலில் இன்னும் பல சிகரங்களை அவர் எட்டுவார் எனவும் சபரீசன் மனமார வாழ்த்தவும் செய்தார். நடிப்பதை கைவிட முடிவெடுத்த போது உதயநிதி ஸ்டாலின் வருத்தப்பட்டார் என்றும் ஆனால் இப்போது தனக்கிருக்கும் மக்கள் பணிகளால் அந்த வருத்தம் அவருக்கு இல்லை எனவும் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் முழுக்க முழுக்க அரசியல்வாதியாக் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை தான் சபரீசன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், எப்போதுமே பிரஸ்மீட் என்றால் அதை தவிர்க்கக் கூடிய சபரீசன் நேற்றைய தினம் மறுப்பு ஏதும் சொல்லாமல் பொறுமையாக பதில் அளித்துவிட்டு சென்றது தான்.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகும் கடைசி திரைப்படமான மாமன்னன் திரைப்படத்தை தாம் இன்னும் பார்க்கவில்லை என்றும் படப்பிடிப்புக்கு மட்டும் சென்றிருப்பதாகவும் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal