தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கயத்தார் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இந்தப் பொதுக்கூட்த்தில் கலந்து கொண்ட, தி.மு.க. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல், ‘அண்ணாமலை ஒரு ஆண் மகனா..?’ என கடும் எச்சரிக்கை விடுத்துப் பேசியிருப்பதுதான், அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடியில் நடந்த தி.மு.க. அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. அரசின் இரண்டாண்டு சாதனைகளைப் பற்றி பேசிய எஸ். ஜோயல், அடுத்து அண்ணாமலையை நேரடியாகவே அட்டாக் செய்தார், ‘‘அண்ணாமலை அவர்களே வாய் சவடால் பேசுகிற முன்னாள் காவல்துறை அதிகாரியே நான் உங்களை கேட்கிறேன் உங்களால் என்னோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? தி.மு.க. இளைஞரணியில் லட்சோப லட்ச தொண்டர்களில் ஒருவரான கேட்கிறேன். பத்து நிமிடம் என்னிடம் நீங்கள் விவாதத்திற்கு வந்தால் தயாரா? என்பதை சொல்லவேண்டும்.

  • பிரதமர் மோடி அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 15 லட்சம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்துவேன் என்று சொன்னாரே..! அந்த வங்கி கணக்கில் கொடுத்த 15 லட்சம் பற்றி நான் விவாதிக்க தயார், நீங்கள் தயாரா ?
  • அண்ணாமலை அவர்களே உங்கள் தலைவர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் பற்றியும், அவர் பல்கலைக்கழகத்தில் படித்தது பற்றியும் விவாதிக்க நான் தயார், நீங்கள் தயாரா ?
  • நீங்கள் தேசப்பற்று என்று சொல்லி உங்கள் கையில் கட்டியிருக்கிறீர்களே அந்த ரபேல் கைக் கடிகாரத்தின் போலித்தனத்தை பற்றி விவாதிக்க நான் தயார், நீங்கள் தயாரா?
  • பிரதமர் மோடியின் நண்பர் அதானி குறித்தும், அந்த அதானி குழுமத்தின் ஹிண்டன் பர்க் அறிக்கை குறித்தும் விவாதிக்க நான் தயார், நீங்கள் தயாரா ?
  • ஆண்டுக்கு இரண்டு கோடி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பேன் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னாரே பிரதமர். எத்தனை கோடி பேருக்கு இதுவரை வேலைகொடுத்துள்ளார் என்பது பற்றி விவாதிக்க நான் தயார். நீங்கள் தயாரா?
  • அண்ணாமலை அவர்களே நீங்கள் அ. தி. மு. க. வுடன் கூட்டணி என்றால் பா.ஜ.க தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று சொன்னீர்களே, செய்தீர்களா? இல்லை, செய்வீர்களா அது பற்றி விவாதிக்க நான்தயார், நீங்கள் தயாரா?
  • தமிழகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பா. ஜ. க . வின் ஊழல் பட்டியல் பற்றியும், அவர்களின் சொத்துபட்டியல் பற்றியும் விவாதிக்க நான் தயார், நீங்கள் தயாரா ?
  • உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஊழல் ராணி ஜெயலலிதா பற்றியும், நீங்கள் கூட்டணி வைத்துள்ள அந்த கொள்ளை கூட்டத்தின் ஊழல் பட்டியல் பற்றியும் விவாதிக்க நான் தயார், நீங்கள் தயாரா ?
  • கருப்பு பணத்தை மீட்பேன் என்று கர்ஜித்தாரே பிரதமர்மோடி! கருப்பு பணம் மீட்டதுண்டா? இல்லை இந்த பத்தாண்டு காலத்தில் எத்தனை லட்சம் கோடி கருப்பு பணத்தை மீட்டுள்ளார் என்பது பற்றி விவாதிக்க நான் தயார். நீங்கள் தயாரா?
  • இலவசங்களுக்கு எதிராக கர்ஜத்துவிட்டு, இன்றைக்கு இலவசங்களை கர்நாடகாவில் வாரியிறைத்து இருக்கிறீர்களே.. இது பற்றி விவாதிக்க நான் தயார், நீங்கள் தயாரா?

அண்ணாமலையே நாவை அடக்குங்கள். நீங்கள் நல்ல ஆண்மகனாக இருந்தால் எனக்கு பதில் சொல்லுங்கள். இல்லை என்றால் உங்களை அரசியலை விட்டு ஓட ஓட விரட்டி அடிக்கும் வரை திமுக இளைஞரணி ஓயாது என்பதை பதிவு செய்கிறேன்’’ என்று ஆவேசமாக கர்ஜித்திருக்கிறார்!

ஈரோடு இடைத்தேர்தலைப் பார்த்து ‘தமிழக அரசியலே’ எனக்கு ஒத்துவராது என்று கூறிய அண்ணாமலை, தி.மு.க. இளைஞரணியின் தாக்குதலை தாக்குப் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal