‘அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை’ என்று ஓ.பி.எஸ். & எடப்பாடி இணைப்பு பற்றி அடிக்கடி இந்த வார்த்தையை உதிர்த்தவர் வ.மைத்ரேயன். இன்று அது நிரூபணமாகியிருக்கிறது. அதே போல்தான் ஓ.பி.எஸ். & டி.டி.வி. ஆணியோர் கையைக் குலுக்கி இணைந்தாலும், அவர்களுடைய ஆதரவாளர்களின் இதயங்கள் இணையவில்லை என்கிறார்கள்!

அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ பன்னீர் செல்வம் நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து பேசினார். சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு டிடிவி தினகரனும் ஓ பன்னீர் செல்வமும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய டிடிவி தினகரன், ‘‘சிபிஐ, சிபிஎம் கட்சிகள் போல நானும் ஓபிஎஸ்சும் இணைந்து செயல்படுவோம். எனக்கும் அவருக்கும் சுயநலம் கிடையது. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் கையில் இந்த இயக்கம் இருக்க வேண்டும். அதை கபளீகரம் செய்து பணபலம் ஆணவத்தோடு செயல்படுவர்களிடம் இருந்து அதிமுகவை மீட்டெடுத்து தீயசக்தி திமுகவை வீழ்த்த ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் இந்த இயக்கத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் நானும் ஓபிஸ்சும் இணைந்து இருக்கிறோம்.

எங்கள் தொண்டர்கள் நிர்வாகிகள் விருப்பம் இதுதான். செய்தியாளர்கள் கேட்கும் போது கூட உரிய நேரத்தில் சந்திப்போம் என்று சொல்லி வந்தேன். அதற்கான நேரம் இப்போது வந்து விட்டது. எங்களுக்குள் மனதளவில் பகை உணர்வு கிடையாது. ஒரு சில காரணங்களால் பிரிந்து இருந்தோம். மீண்டும் ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம். எங்களுடைய ஒரே குறிக்கோள் உண்மையான அம்மாவின் தொண்டர்களிடம் இந்த இயக்கத்தை ஒப்படைப்பதுதான்.

ஓ பன்னீர் செல்வத்தை நம்பி இருட்டில் கூட கையை பிடித்து செல்லலாம். எடப்பாடி பழனிசாமியை நம்பி போக முடியுமா? எடப்பாடி பழனிசாமி துரோகி எனில் திமுக எங்களுக்கு பொது எதிரி” என்று தெரிவித்தார். டிடிவி தினகரனின் ஓ பன்னீர் செல்வத்தின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சசிகலா வெளியூர் சென்று இருப்பதால் அவர் வந்த உடன் சந்திக்க இருப்பதாக ஓ பன்னீர் செல்வம் கூறியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இவர்கள் மூன்று பேரும் கைகோர்த்து செயல்படுவார்கள் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. ஓ பன்னீர் செல்வம் – டிடிவி தினகரனின் இந்த முடிவால் வரும் நாடாளுமன்றத்தில் தேர்தல் கூட்டணிகள் மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதற்கிடையே ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி. இணைப்பு பற்றி அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், ஓ.பி.எஸ். மூன்று முறை முதல்வராவதற்கு காரணமே டி.டி.வி.தினகரன்தான். அப்படிப்பட்டவரையே எதிர்த்து ‘தர்மயுத்தம்’ தொடங்கியவர்தான் ஓ-பிஎஸ். அதன் பிறகு நடந்தவற்றை மீண்டும் கூறத்தேவையில்லை. பசையுள்ள வீட்டு வசதித்துறையை கையில் வைத்துக்கொண்டிருந்த போது எத்தனையோ முறை சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் ஓ.பி.எஸ்.ஸை அழைத்த போதும், எடப்பாடி தரப்பு ஓ.பி.எஸ்.ஸை ஓரங்கட்டிய போதும், ‘வருமானம் வருகிறதே…’ என்று பல்லைக் கடித்துக்கொண்டு இருந்தார்.

அதன் பிறகு, ராஜ்யசபா சீட்டையும் தனது ஆதாரவாளருக்கு (வாங்கிக்கொண்டு) அடம்பிடித்து பெற்றுக்கொடுத்தார். அதன் பிறகு அ.தி.மு.க.விலிருந்தே ஓ-பிஎஸ் நீக்கப்பட்டார்.

இந்த நிலையில்தான் டி.டி.வி.தினகரனைச் சந்தித்திருக்கிறார். ஆரம்பத்தில் ஓ.பி.எஸ்.ஸை சந்திக்க டி.டி.வி.யும் விரும்பவில்லை. காரணம், டி.டி.வி. தனிக்கட்சி நடத்துகிறார். ஒன்று அந்தக்கட்சியில் ஓ.பி.எஸ்.ஸை இணைக்க வேண்டும். அல்லது ஓ.பி.எஸ்.ஸுடன் இணைந்து ‘நாங்கள்தான் அ.தி.மு.க.’ என்று டி.டி.வி. சொல்லவேண்டும். இரண்டும் இல்லாமல் ‘கம்யூனிஸ்டு இயக்கங்கள்’ போல் செயல்படுவோம் என்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.

இதைக்கூட விடுங்கள்…. இருவரிடமும் கைவிட்டு எண்ணக்கூடிய அளவில்தான் நிர்வாகிகள் இருக்கிறார்கள். இருவரும் ‘கைகுலுக்கி’ இணைந்திருக்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு கீழ் இருக்கும் நிர்வாகிகளின் இதயங்கள் இணைந்து செயல்பட விரும்பவில்லை என்பதுதான் உண்மை’’ என்றனர்.

‘அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை’ என்ற வ.மைத்ரேயனின் வார்த்தை ஓ.பி.எஸ். & டி.டி.வி. அணிக்கும் பொருந்துமோ..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal