‘அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவின் ஆதரவு எனக்கு இருப்பதால், அடுத்த திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் நான்தான்’ என ‘முத்து’க்குளிக்க ஆயத்தமாகி வருகிறாராம் ஒன்றியச் செயலாளர்!

இது பற்றி உ.பி.க்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், தற்போது திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் காடுவெட்டி தியாகராஜன்! இவரை ‘மாமா’ என்று உறவின் அடைமொழியோடுதான் அழைப்பார். அப்படிப்பட்ட மாமாவிற்கே துரோகம் செய்ய துணிந்து விட்டார் ‘மாப்பிள்ளை’!

அமைச்சர் கே.என்.நேருவினுடைய மகனின் ஆதரவு தனக்கு முழுக்க இருக்கிறது என்று வெளியில் காட்டிக்கொள்கிறார். உண்மையிலும், அமைச்சர் கே.என்.நேருவின் மகன் இவர் மீது தனி மரியாதை வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். காரணம், பச்சைமலைக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க அருண் நேரு வந்தபோது சிறப்பான வரவேற்பு கொடுத்து அசத்தியிருக்கிறார்கள். அந்த வரவேற்பு கொடுத்தது ‘இவர்’தான் என நினைத்துக்கொண்டிருக்கிறார் அருண் நேரு. உண்மையில் சிறப்பான வரவேற்பை கொடுத்தது மாவட்ட கவுன்சிலர் தீபா சின்ராஜ்தான்!

இப்படி திருச்சி புறநகர் பகுதியான புளியஞ்சோலை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு வரும்போது, அருண் நேருவிடம் மிகுந்த நல்லபெயர் எடுப்பதுபோல் எடுத்து விடுகிறார். ஆனால், உண்மையில் நடப்பது வேறு… சமீபத்தில்கூட ரோடு காண்டிராக்ட் உள்பட பல்வேறு விஷயங்களில் மாவட்டம் உள்பட பலருக்கு கமிஷன் கொடுக்காமல், ‘மொத்தத்தையும்’ இவரே சுருட்டிக் கொள்கிறாராம். இதனால், இவருக்கு கட்சியினர் மத்தியில் அவப்பெயர்தான் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான், அடுத்த மாவட்டச் செயலாளர் நான்தான். அமைச்சர் கே.என்.நேருவின் மகன் என்னை சிபாரிசு செய்யத் தயாராகிவிட்டார் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருகிறாராம். அதேபோல், என்னை யாரும் அசைக்கவும் முடியாது, ஆட்டிப் பார்க்கவும் முடியாது. என்னை எதிர்த்தால், இந்தப் பகுதியிலேயே இருக்க முடியாது என சவால் விடுத்து வருகிறாராம்.

தற்போதைய மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜனோ, கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார். அப்படியிருக்கும் போது மாற்றம் நடக்க வாய்ப்பு குறைவு’’ என்றனர்.

தனது திடீர் ‘செல்வத்தால்’ ‘முத்து’ குளிப்பேன் என்று அடித்துக் கூறி வருகிறாராம் ஒன்றியச் செயலாளர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal