‘தி.மு.க.வின் ‘பி’ டீமாக ஓ.பி.எஸ். செயல்பட்டு வருகிறார் என்று எடப்பாடி பழனிசாமி நேரடியாகவே தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். இந்த நிலையில் அந்த விமர்சனத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில் முதல்வர் மருமகன் சபரீசனை ஓ.பி.எஸ். சந்தித்துப் பேசியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் நேற்று மோதியது. இதில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 13 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் நடந்த போட்டியில் மும்பையை சென்னை அணி வீழ்த்தி உள்ளது. இந்த போட்டியை காண தனுஷ், நயன்தாரா, விக்னேஷ் சிவன், அனிருத், லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின் உள்பட ஏராளமான திரையுலக பிரபலங்கள் வந்திருந்தனர்.

அதேபோல் அதிமுக-வை சேர்ந்த ஓ பன்னீர்செல்வமும் வந்திருந்தார். அவர் இந்தப் போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள கருணாநிதி ஸ்டாண்டில் அமர்ந்து பார்த்தார். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதைப் போல் அவரின் மற்றொரு புகைப்படம் அரசியல் வட்டாரத்தை அதிரச் செய்தது. அது என்னவென்றால் அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசனை சந்தித்து பேசிய புகைப்படம் தான்.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ஓபிஎஸ் திமுக-வுக்கு தாவ உள்ளாரா என கேள்வி எழுப்பி வந்தனர். ஏற்கனவே அதிமுக-வின் தனி அணியாக பிரிந்து செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம், திடீரென சபரீசனை சந்தித்து பேசியது சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆனது.

எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் விதமாக முன்னாள் அதிமுக அமைச்சரும், ஈபிஎஸ் அணியை சேர்ந்தவருமான ஜெயக்குமார், ஓபிஎஸ்-ஐ விமர்சித்து டுவிட் ஒன்றை போட்டுள்ளார். அதில் ஓபிஎஸ் சபரீசனை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, ‘பூனைக்குட்டி வெளியே வந்தது’ என குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

தி.மு.க.வின் ‘அரசியல் மூளை’யாக செயல்பட்டு வருபவர் சபரீசன். இந்த நிலையில் அ.தி.மு.க.வில் மேலும் கலகங்களை ஏற்படுத்த ஓ.பி.எஸ்.ஸுக்கு ஐடியா கொடுக்கப்பட்டதா என்ற விமர்சனங்களும் எழ ஆரம்பித்திருக்கிறது!

இதற்கிடையே, ஓ-பிஎஸ்ஸை அ.தி.மு.க.வில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்தி வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. இந்த விவகாரம் தொடர்பாக அவருக்கும் உடனடியாக தகவல் பாஸ் செய்யப்பட்டிருக்கிறதாம்!

எனவே, ஓ-.பி.எஸ். விவகாரத்தில் பா.ஜ.க. மேலிடம் விரைவில் ஒரு முடிவெடுக்கும். அந்த முடிவு அவரது அரசியல் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal