கடந்த சட்மன்றத் தேர்தலில் மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நீர்வளத்துறை அமைச்சராக இருக்கிறார் துரைமுருகன். ‘தோல்வியைத் தழுவிவிடுமோ என்ற அச்சத்தில் அவருக்கு நெஞ்சுவலி வந்ததாகவும், மு.க.ஸ்டாலின் நேரடியாக பேசிய பிறகுதான், அவர் சகஜ நிலைக்கு திரும்பினார் என்று அப்போதே தகவல்கள் கசிந்தன!

இந்த நிலையில்தான், ‘என்னுடைய பெயரைச் சொல்லி பலர் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் யாரையும் தாம் சும்மா விடப்போவதில்லை. கம்பி எண்ண வைக்கப் போகிறேன்’ என கொந்தளித்து பேசியிருப்பதுதான் தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் பேசிய துரைமுருகன், ‘‘என்னுடைய பெயரைச் சொல்லி எனது தயவில் வந்த சர்க்கரை ஆலையை வைத்து கொள்ளையடிப்பவர்கள் இன்னும் ஒரு மாதத்திலோ அல்லது ஒன்றரை மாதத்திலோ கம்பி எண்ணுவார்கள். யார் தவறு செய்கிறார்கள் என்ற லிஸ்டை ரெடி செய்து வைத்திருக்கிறேன். ஒருத்தரையும் சும்மா விட மாட்டேன்’’ என பகிரங்கமாகவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர் துரைமுருகனின் இந்த சீற்றத்தை கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் தொகுதியில் தன்னை சந்திக்க வருபவர்களில் பெரும்பாலானோர் முதியோர் உதவித் தொகை வரவில்லை என்ற புகாரை கூறுவதாக தெரிவித்தார்.

புரோக்கர்கள் ரொம்ப பேர் பத்தாயிரம் கொடு, பதினைந்து ஆயிரம் கொடு முதியோர் உதவித் தொகை வாங்கித் தருகிறேன் என ஏமாற்றும் தகவலும் தனக்கு கிடைத்திருப்பதாக கூறிய அமைச்சர் துரைமுருகன், அது போல் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். முதியோர் உதவித் தொகை பெற்றுத் தருகிறேன் பணம் கொடுங்கள் என எந்த புரோக்கராவது கேட்டால் நேராக தன்னிடம் உரியவர்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும் அரசின் பெயரை கெடுக்கும் நபர்களை கைது செய்ய வைப்பேன் எனவும் கூறினார்.

மேலும், முதியோர் உதவித் தொகை விவகாரத்தை கவனிக்கும் சிறப்பு தாசில்தாரிடம் இது குறித்து கறாரான முறையில் சில அறிவுறுத்தல்களை தாம் வழங்கியிருப்பதாகவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

ஏற்கனவே ஆடியோ விவகாரம் தி.மு.க.வை உலுக்கிக் கொண்டிருக்கும் நிலையில், சீனியர் அமைச்சரான துரைமுருகனின் பேச்சும் அறிவாலயத்தல் அனலடித்துக்கொண்டிருக்கிறது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal